சென்னை: அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், குறித்த நேரத்தில் டிக்கெட் கிடைக்க முடியாததாலும் பயணிகள் ரயிலை தவறவிட்டு, அவதிக்குள்ளாகினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கத்திலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மார்க்கத்திலும் தினமும் 500க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் கட்டணங்களை விட புறநகர் ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் நாள்தோறும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கால அட்டவணை மாற்றப்பட்டது. இதில், மொத்த புறநகர் மின்சார ரயில் சேவையில் சுமார் 54 மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக 16 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு வந்து, பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நேற்று அரக்கோணம், சென்னை மற்றும் கடற்கரை, கடம்பத்தூர், திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ஒரு சில நேரங்களில் ஊழியர்கள் குறித்த நேரத்தில் டிக்கெட் வழங்குவதில்லை என பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதுபோல், டிக்கெட் குறித்த நேரத்திற்குள்ளாக நேற்று பெறமுடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் சென்னை செல்லும் மின்சார ரயில்களை பயணிகள் சிலர் தவறவிட்டனர். எனவே, கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்கவும், உரிய நேரத்தில் ஊழியர்கள் டிக்கெட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் சேவையை அதிகரிக்காமல், குறைத்திருப்பது வேதனையாக உள்ளது என பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.