கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊனமாஞ்சேரி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியியிலிருந்து ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2018-2019ம் ஆண்டு முதல் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு பணி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை.
எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ திறந்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 2018-2019ல் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதலாக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மேல்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் பணி முடிக்கப்பட்டு பல மாதங்களாகிறது. இதுவரை திறக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.