சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் கல் வீசிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் அலுவலக வளாகத்திற்குள் பீர் பாட்டில்கள், கற்களை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா, மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இச்சம்பவம் குறித்து ஆங்காங்கே கம்யூனிஸ்ட் கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில், அலுவலகத்தில் கற்கள், மது பாட்டில்களை வீசியது தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான அலெக்ஸ் (22), பாரதி (20), பார்த்திபன் (21) மற்றும் அருண்குமார் (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, வாட்ச் மேன் சுதாகருடன் தகராறில் ஈடுபட்டதும், கட்சி அலுவலகத்திற்குள் கற்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை வீசியதும் தெரிந்தது. கட்சி அலுவலகத்திற்குள் இருந்த மரத்தில் இருந்து கம்பளி பூச்சிகள் இவர்கள் வசித்து வந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இவ்வாறு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாலன் இல்லத்தில் நடந்த சட்டவிரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.