சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, என்றும், கோயில்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துமா என்று தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேவையற்ற சர்ச்சையை எழுப்பியிருக்கிறார். தந்தை பெரியாரின் கனவை நினைவாக்குகிற வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பெண்கள் உள்ளிட்ட பலர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் புரட்சியை ஒட்டித் தான் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அனைவருக்கும் பொதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை ஏன் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு. தற்போது வக்பு வாரிய துறைக்கு செஞ்சி மஸ்தான் அமைச்சராக இருக்கிறார். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜவை வளர்த்து விடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.