புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, ‘நாட்டில் மதசார்பற்ற சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது வகுப்புவாத சிவில் சட்டங்கள் என்றும் வர்ணித்துள்ளார். இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 11வது ஆண்டாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்கள் வகுப்புவாத சிவில் சட்டங்கள் என்று சமூகத்தில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இதில் உண்மை இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக வகுப்புவாத சிவில் சட்டங்களை நாம் பின்பற்றி உள்ளோம். இது நாட்டை மத ரீதியாக பிரித்து, சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது. இப்போது, மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையும் இதுதான். உச்ச நீதிமன்றமும் அதன் தேவையை பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியது, அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் அக்கறை கொண்டுள்ளனர், விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன். இந்தியா எப்போதும் வங்கதேசத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை விரும்புகிறது. வங்கதேசத்தின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் தூக்கிலிடப்படுவது உறுதி என்பதை உணர வேண்டும். இது தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் பொது வாழ்வில் நுழைய வேண்டும். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்.
எண்ணிலடங்கா உள் மற்றும் வெளிநாட்டு சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. நாட்டின் வளர்ச்சி மனித குலத்தின் நலனுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான சதி திட்டங்களில் வெளிநாடுகள் பங்கு பெறக் கூடாது. எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். நாட்டின் எழுச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவின் நலனைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது. அதை நாடு புரிந்து கொள்ள வேண்டும். விரக்தியின் ஆழத்தில் மூழ்கியிருக்கும் அவர்களை நாடு தவிர்க்க வேண்டும் . இத்தகைய வக்கிரம் பிடித்தவர்கள் அனைத்தையும் அழித்து, அராஜகத்திற்கு வழி வகுப்பார்கள். இது நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்துகிறது, தேசத்தை சரிசெய்ய நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை முன்னெடுக்க வேண்டி உள்ளது.
இருக்கிற வசதியே போதும் என்ற மனப்பான்மையுடன் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது வாழ்க்கையை மாற்றும் நோக்கில் பெரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீர்திருத்தங்கள், எந்த அரசியல் நிர்ப்பந்தத்தாலும் கொண்டுவரப்படவில்லை. மாறாக தேசத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வோடு கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவின் பொற்காலம். உலகளாவிய சூழலில், இந்த வாய்ப்பை இந்திய மக்கள் விட்டுவிட வேண்டாம். சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். முதலீட்டை ஈர்க்க மாநிலங்கள் தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் வரை, நாடு முழுவதும் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாக அமைப்புகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். குடிமக்கள், தனக்கு உரியது கிடைக்கவில்லை என்று புகார் செய்யும் நிலை வரக்கூடாது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளனர். மறுபுறம் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர். இது எனக்கு சமமான பெருமைக்குரிய விஷயம். சாலை, ரயில், துறைமுகம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என நாட்டின் உள்கட்டமைப்பை அரசு நவீனப்படுத்தியுள்ளது. இது நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியுடைய அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளது.
ஊழல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்க நினைக்கிறேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் கோடிட்டுக் காட்டினார், மேலும் நாடு உற்பத்தியில் தொழில்துறை மையமாக மாறும். சவால்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை இருக்கலாம், ஆனால் இலக்குகளில் ஒன்றுபட்ட மக்கள் தங்கள் இலக்கை அடைய இதை முறியடிக்க முடியும். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நாம் எட்டுவோம். இந்த இலக்கை அடைவதற்கான ஆலோசனைகளை நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 140 கோடி குடிமக்கள் ஒற்றுமையான உறுதியுடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்தால் வளமான மற்றும் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கிறது. 3 முதல் 6 மாதத்துக்கு ஒரு முறை இப்படி தேர்தல் நடத்தப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எல்லா பணிகளும் தேர்தலோடு தொடர்புடையதாக உள்ளது. இதற்கு தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் முறைதான். இது தொடர்பாக நாடு முழுவதும் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், நாட்டின் வளங்கள் தேர்தல் நடத்துவதற்காக வீணாகாது. அதை மக்களின் நலனுக்கு பயன்படுத்தலாம்,’’ என்றார்.
சிறப்பு விருந்தினர் 6,000 பேர் பங்கேற்பு
டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள், எல்லையில் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொண்ட பணியாளர்கள், அடல் புத்தாக்க திட்டத்தில் பலனடைந்த மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பழங்குடியினர், விவசாயிகள், ஒன்றிய அரசின் திட்டங்களில் பலனடைந்த பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கவுரவிக்கப்பட்டனர்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விவிஐபிக்கள்
சுதந்திர தின விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜூ, கிஷன் ரெட்டி, அஸ்வினி வைஸ்ணவ், சிவ்ராஜ் சிங் சவுகான், சிராக் பஸ்வான், ஜெ.பி.நட்டா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்ளிட்ட விவிஐபிக்கள் பங்கேற்றனர். மேலும், பல்வேறு நாட்டு தூதர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் அவரவர் பாரம்பரிய உடை அணிந்து சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.
மகாத்மா நினைவிடத்தில் அஞ்சலி
பிரதமர் மோடி நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செங்கோட்டைக்கு வந்தார். அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் ஆர்மனே ஆகியோர் வரவேற்றனர். முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் டி.திரிபாதி, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். லெப்டினன்ட் ஜெனரல் பாவ்னிஷ் குமார் தலைமையில் முப்படைகள் மற்றும் டெல்லி போலீசாரின் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, மழைத் தூறல்களுக்கு மத்தியில் காலை 7.30 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து
உரையாற்றினார்.
21 குண்டுகள் முழங்கி மரியாதை
செங்கோட்டையில் கியான்பாத் பகுதியில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2000 என்சிசி மாணவர்கள் மூவர்ண கொடி நிறத்தை பிரதிபலிக்கும் உடையுடன் அமர்ந்திருந்தனர். கொடியேற்றச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களைப் பார்த்ததும் தனது பாதுகாப்பு நடைமுறையை மீறி மாணவர்களுடன் கை குலுக்கினார். பல மாணவ, மாணவிகளும் பிரதமர் மோடிக்கு கைகொடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து 1721 பீல்ட் பேட்டரி படையினர் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 105எம்எம் இலகுரக பீரங்கி மூலம் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
கருப்பொருள்
‘2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய தொலைநோக்கு பார்வை’ என்பதே 78வது சுதந்திர தின விழாவின் கருப்பொருளாக இருந்தது. இந்தியாவின் பொற்கால சகாப்தமாகவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவாகவும் இருக்கக் கூடிய 2047ம் ஆண்டை தேசம் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
ராகுல் காந்திக்கு பின்வரிசையில்
இருக்கை ஒதுக்கியதால் சர்ச்சை: மோடியின் அற்பத்தனமான அரசியல் என காங். குற்றச்சாட்டு
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி முதல் முறையாக பங்கேற்றார். பிரதமராக மோடி 2014ல் பதவியேற்ற பிறகு, சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பது இதுவே முதல் முறை. ராகுல் காந்திக்கு கடைசியிலிருந்து 2வது வரிசையில், அதாவது 5வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுடன் ராகுல் அமர்ந்திருந்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியானது கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது. விதிமுறைப்படி, எதிர்க்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். வாஜ்பாய் ஆட்சியில் கூட எதிர்க்கட்சி தலைவராக இருந்த சோனியா காந்திக்கு முதல் வரிசை இருக்கையே ஒதுக்கப்பட்டது. ஆனாலும் ராகுலை பின்வரிசையில் அமர வைத்து மோடி அரசு அவமதித்து விட்டதாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது மோடி அரசின் அற்பத்தனமான அரசியல் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மக்களவை தேர்தலுக்குப்பிறகும் மோடி இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் முன்வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டிய மரபு இருக்கும் நிலையில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருவருக்கும் 5வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது ஏன் எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்வது ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம். அதன் அதிகாரிகள் கூறியதாக வெளியான தகவலில், ‘‘எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நடைமுறைப்படி முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஒலிம்பிக் வீரர்களுடன் சேர்ந்து அமர வேண்டுமென கேட்டுக் கொண்டதால் பின்வரிசையில் அமர வைக்கப்பட்டார்’’ என கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
முதல் வரிசையில் அமித்ஷா. நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். எனவே ராகுல் காந்தி பின்வரிசையில் அமர வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிக முறை தேசிய கொடி ஏற்றியதில் மோடி 3ம் இடம்
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11வது முறையாக நேற்று சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் மூலம் மோடி அதிக முறை தேசியக் கொடி ஏற்றி 3வது பிரதமராகி உள்ளார். 2004 முதல் 2014 வரை 10 முறை தேசியக் கொடி ஏற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் முந்தி உள்ளார். நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு 1947 முதல் 1964 வரை 17 முறை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி முதல் இடத்தில் உள்ளார். இந்திரா காந்தி 16 முறை தேசியக் கொடி ஏற்றி 2வது இடத்தில் உள்ளார்.
கூடுதலாக 75,000 மருத்துவ சீட்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். அவர்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ சீட்களை ஒன்றிய அரசு இந்தியாவிலேயே உருவாக்கும். அதன் பிறகு இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கத் தேவை இருக்காது. இந்தியாவிலேயே படிக்கலாம். இந்தியர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கு பதிலாக, வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வரும் சூழல் உருவாக்கப்படும்,’’ என்றார்.
முதல் முறையாக வங்கதேச எல்லையில் இனிப்பு பரிமாற்றம்
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி முதல் முறையாக நேற்று எல்லையில் வங்கதேச வீரர்களுடன் இனிப்பு பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஜிடே எல்லை முகாம் அருகே எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த சேர்ந்த பெண்கள் கொண்ட குழுவினர் வங்கதேச வீரர்களுடன் இனிப்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு அசாதாரண சூழல் நிலவும் நிலையில், உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோடியின் நீண்ட சுதந்திர தின உரை
பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக பங்கேற்ற நேற்றைய சுதந்திர தின விழாவில் 98 நிமிடங்கள் உரையாற்றினார். மேலும், அவரது நீண்ட நேர சுதந்திர தின உரையும் இதுவே. இதற்கு முன் அவர் 2016ல் 96 நிமிடங்கள் உரையாற்றியதே அதிகபட்சமாக இருந்தது. 2014ல் முதல் முறையாக பிரதமராக சுதந்திர தின உரையாற்றிய அவர் 65 நிமிடமும், 2015ல் 88 நிமிடமும், 2017ல் 56 நிமிடமும், 2018ல் 83 நிமிடமும், 2019ல் 92 நிமிடமும், 2020ல் 90 நிமிடமும், 2021ல் 88 நிமிடமும், 2022ல் 74 நிமிடமும், 2023ல் 90 நிமிடமும் பேசி உள்ளார். இதன் மூலம் நீண்ட நேர சுதந்திர தின உரையாற்றிய பிரதமராக மோடி உள்ளார்.
மோடிக்கு முன்பாக 1947ல் நேரு 72 நிமிடமும், 1997ல் ஐ.கே.குஜ்ரால் 71 நிமிடமும் சுதந்திர தின உரைாற்றியதே அதிகபட்சமாகும். நேரு, இந்திரா காந்தி முறையே 1954 மற்றும் 1966ல் 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியது மிகக் குறைந்த நேர சுதந்திர தின உரை. இதே போல முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் 2012, 2013ல் முறையே 32, 35 நிமிடங்களில் சுதந்திர தின உரையை முடித்துள்ளார். வாஜ்பாய் 2002, 2003ல் முறையே 25, 30 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி உள்ளார்.
உலக தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ரஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.