* பல ரயில்கள் ரத்தானதால் மக்கள் அவதி, 5 மணி நேரத்துக்கு பின் சீரானது
சென்னை: ஆவடி அருகே மின்சார ரயிலின் 4 பெட்டிகள் நேற்று காலை தடம் புரண்டன. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாயினர். 5 மணி நேர மீட்பு பணிக்கு பின், பாதை சீரமைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு தினம்தோறும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமல்லாது, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வருகின்றன. இதேபோன்று, தினசரி லட்சக்கணக்கானோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்கின்றனர்.
அதன்படி, அன்னனூர் பணிமனையில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. எப்போதும் போல, அந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்ட்ரல் சென்றடையும். ஆனால், ஆவடி ரயில்நிலையத்தை அடையும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இந்து கல்லூரி ரயில் நிலையத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து ரயில் சிறிது தூரம் சென்ற நிலையில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் ரயிலின் முன் பகுதியில் உள்ள 4 பெட்டிகளும் தடம்புரண்டன. இந்த ரயிலை ஓட்டி சென்ற டிரைவர் ரவிக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், இச்சம்பவம் நடைபெறும்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் எதிரே எந்த ரயிலும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள் ரயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அனைத்து விரைவு ரயில்கள், மின்சார ரயில்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் அவதிக்குள்ளாகினர். மேலும், தடம்புரண்ட ரயிலை மீட்டு ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவரின் கவனகுறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நல்ல வேளையாக அதிகாலையில், ஆட்கள் இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரமாக மீட்பு பணியில் 500 ரயில்வே ஊழியர்கள் தொய்வின்றி ஈடுபட்டனர். ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனகுறைவே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, விசாரணைக்கு பிறகு துறை ரீதியான முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
* திருப்பதி ரயில் ரத்து
விடுமுறை தினத்தையொட்டி பொதுமக்கள் பலர் திருப்பதி செல்ல அதிகளவில் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 7 மணிக்கும், 9.50 மணிக்கும் என இரண்டு ரயில்கள் இயக்கப்படும் அந்தவகையில் ஆவடி ரயில் தடம் புரண்ட காரணத்தால் 7 மணி ரயில் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக முன்பதிவு செய்திருந்தோர் மற்றும் கோவிலுக்கு செல்லவிருந்தோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
* ரயில்வே பாதுகாப்பு அறிக்கையின்படி, கடந்த 2010-20 ஆண்டுகளில் 156 கோர விபத்துகள் உட்பட 1300க்கும் மேற்பட்ட விபத்துகள் தண்டவாளத்தில் குறைபாடு, சிக்னல் பிரச்சனை, மனித பிழை போன்ற காரணிகளால் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
ரயில் தடம் புரண்டது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்: ஆவடியில் நேற்று காலை 5.40 மணியளவில் மின்சார ரயிலின் ஆட்கள் இல்லாத 4 பெட்டிகள் தடம் புரண்டதை தொடர்ந்து ஒரு சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதேபோல், சில புறநகர் மின்சார ரயில்களால் சிறிய இடையூறு ஏற்பட்டது. 9.30 மணியளவில் மெயின் லைனில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யபட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. 8 விரைவு ரயிலை தவிர அனைத்து விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயங்குகின்றன. தடம் புரண்ட பெட்டிகளை முற்றிலுமாக அகற்றி, புறநகர் மின்சார ரயில் செல்லும் வழித்தடம் சீரமைக்கப்பட்டுவிட்டது. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை அனைத்தும் வழக்கம் போல, செயல்பட தொடங்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் முதற்கட்ட விசாரணையை விரைவில் தொடங்குவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தொடரும் அலட்சிய போக்கு
தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் என தினசரி ஆயிரக்கணக்கில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தை பொறுத்தவரை முக்கிய ரயில் நிலையங்களாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்டவை திகழ்கின்றன. இதில், ரயில் விபத்துகளை பொறுத்தவரை தடம் புரண்டது, கேட் விபத்து, தீ விபத்துகள் மற்றும் இதர வகை விபத்துகள் என வகைப்படுத்தினாலும், டிரைவர்களின் அலட்சிய போக்கினாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
* கடந்தாண்டு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சென்னை கடற்கரை நடைமேடையின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தியது.
* கடந்த ஜூன் 11ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில் இரண்டு சக்கரம் ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.
* கடந்த மே மாதம் 15ம் தேதி சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டது.
* கடந்த ஜூன் 12ம் தேதி பராமரிப்பு ரயில் சென்னை பணிமனையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் செல்லும் போது தடம் புரண்டது.
* 50 ரயில்கள் தாமதம்
ஆவடி ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்று மாலை வரை 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.