புதுடெல்லி: நீதிமன்ற நடைமுறையால் சாதாரண மக்கள் சோர்ந்துவிடுகின்றனர் என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். கடந்த 1950ம் ஆண்டு ஜன. 26ம் தேதி உச்சநீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. இதையொட்டி, உச்சநீதிமன்றம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை புதிதாக தொடங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஒருவாரமாக நடைபெற்றது. சிறப்பு லோக் அதாலத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருமண சச்சரவுகள், சொத்துப் பிரச்னைகள், மோட்டாா் வாகன உரிமை கோரல்கள், நில அபகரிப்பு, இழப்பீடு, தொழிலாளர் பிரச்னைகள் என சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறப்பு லோக் அதாலத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 14,045 வழக்குகளில், 4,883 வழக்குகள் பட்டியலிடப்பட்டு 920 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த சிறப்பு லோக் அதாலத்தில் கலந்து கொண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘நீதிமன்ற நடைமுறையால் சாதாரண மக்களின் மனம் சோர்ந்துவிடுகிறது. பொதுமக்களின் வீடுகளுக்கே நீதியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே லோக்
அதாலத்தின் நோக்கம். அதனால் மக்களில் சிலர் லோக் அதாலத்தை நாடுகின்றனர்’ என்றார்.