டெல்லி: நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். அப்போது உரையாற்றிய அவர்; நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
7 ஐஐடி, ஐஐஎம்-கள் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி அமைக்கப்படும். மகப்பேறு திட்டங்கள், குழந்தை நலத் திட்டங்கள் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படும். 9 கோடி பெண்களை உறுப்பினராக கொண்டுள்ள 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் கிராமங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த்தியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதியாகியுள்ளனர் இவ்வாறு கூறினார்.