சென்னை: மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால் அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
இதன்படி, இந்த நிதியாண்டுக்கு ரூ.15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதில், வீடுகளுக்கு மானியம் ரூ.7,225 கோடியும், விவசாய மானியம் ரூ.6,780 கோடியாகவும்
உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அனைத்துப் பிரிவுகளுக்கும் மின்கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், 1 யூனிட்டுக்கு 20 முதல் 55 காசு வரை கட்டண உயர்வால், மானிய செலவும் உயர்ந்துள்ளது.