சென்னை: ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேநேரம், சாலை விதிகள் குறித்து சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ‘கையெழுத்து இயக்க பதாகையில்’ தனது கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து சென்னையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் சாலையோரம் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட், சீட் பெல்ட், வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேச கூடாது, எல்லைக்கோட்டிற்கு முன்பு வாகனங்களை நிறுத்துவது போன்ற சாலை விதிகள் எழுதப்பட்ட பதாகைகளை பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். பின்னர் சாலையின் இடையே நின்று பதாகையை பிடித்தப்படி, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.