சென்னை: சென்னை எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் கீழ் மற்றும் அண்ணா ரோட்டரி பாயிண்ட்டில் உள்ள சிக்னல்களில் பணியாற்றி வருகிறார். காவலர் செந்தில் குமார் சிக்னல்களில் வாகனங்களை முறைப்படுத்த தனக்கென உரிய பாணியில் தனது கைகளை நடன வடிவில் அசைத்தும், சைகைகள் செய்தும் ஒழுங்குப்படுத்தி வருகிறார். இவரது சிறப்பான பணியை வாகன ஓட்டிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்து டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும், அவர் இரவு நேரங்களில் பேட்டர்ன் லைட்களை வைத்தும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் பணியாற்றி வருகிறார்.
இதனால் காவலர் செந்தில்குமாரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி தங்களது வலைத்தள பக்கங்களில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதற்கிடையே போக்குவரத்து காவலர் ெசந்தில்குமாரின் சிறப்பான பணி குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு பொதுமக்கள் பலர் கொண்டு சென்றனர். அதைதொடர்ந்து கமிஷனர் அருண் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களை கவர்ந்து வரும் போக்குவரத்து காவலர் ெசந்தில்குமாரை நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.