சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.14.65 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், திருநெல்வேலி மாநில வரி கோட்டத்திற்கு உட்பட்ட விருதுநகர் வணிகவரி அலுவலகங்களுக்கு விருதுநகரில் ரூ.6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த கட்டிடத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 1490 சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடமும், 575 சதுர மீட்டர் பரப்பளவில் வணிகவரி அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை போன்ற இதர வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், துறை மறுசீரமைப்பின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட இணை ஆணையர் (மாநில வரி) மற்றும் நுண்ணறிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட 86 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவர்.
அதேபோல, வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வேப்பூர் கிராமத்தில், வேலூர் (மாநில வரி) கோட்டத்திற்கு உட்பட்ட, மாநில வரி அலுவலர், குடியாத்தம் (கிழக்கு) மற்றும் குடியாத்தம் (மேற்கு) அலுவலகங்களுக்கு, குடியாத்தத்தில் ரூ.1 கோடியே 98 லட்சம் செலவில் 824 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு 18 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவர். தேனியில் ரூ.3 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவு துறை அலுவலக கட்டிடத்தையும், நாமக்கல் பதிவு மாவட்டத்தில் – சேந்தமங்கலம் மற்றும் கன்னியாகுமரி பதிவு மாவட்டத்தில் – பள்ளியாடி ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதுவிர செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்களையும், வரி ஏய்ப்பை தடுப்பதற்கு செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்களையும், செங்கல்பட்டு, திருவள்ளூர், தாம்பரம், ஆவடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, சேலம்-II, திருப்பூர்-III, தேனி மற்றும் தென்காசி ஆகிய 13 புதிய வணிகவரி மாவட்டங்களையும், பதிவுத் துறையின் மறுசீரமைப்பு பணிகளின் ஓர் அங்கமாக சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தாம்பரம் பதிவு மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலத்தில், கோயம்புத்தூர் (தெற்கு) பதிவு மாவட்டம் ஆகிய இரண்டு புதிய பதிவு மாவட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் தீரஜ் குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) சுப்புலெட்சுமி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.