சேலம்: நாடு முழுவதும் இம்மாதத்திற்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதன்படி தொடர்ச்சியாக 6வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரலில் ரூ.30.50, மே மாதத்தில் ரூ.19, ஜூனில் ரூ.70.05, ஜூலையில் ரூ.31 என அடுத்தடுத்து குறைக்கப்பட்டது.
கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.7.50 அதிகரித்தது. தற்போது ரூ.38 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் சென்னையில் ரூ.1,817ல் இருந்து ரூ.38 உயர்ந்து ரூ.1855 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1803.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.1691.50, மும்பையில் ரூ.1802.50, கொல்கத்தாவில் ரூ.1802.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.