Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை ஓட்டல், டீக்கடைக்கு மின் கட்டண சலுகை: யூனிட்டுக்கு ரூ.2 மானியம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை மின்அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த மாதம் பிப்ரவரி 28ம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது போர் தொடுத்தன. இதனை தொடர்ந்து ஈரான் அரசால் ஹொர்முஸ் ஜலசந்தியின் வழியாக செல்லும் கப்பல்கள் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவிற்கு வளைகுடா பகுதியில் இருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபட்டது.

தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக கடந்த 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், எரிபொருள் கட்டுப்பாட்டினை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க தொடர்புடைய துறைகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த பிரச்னை தொடர்பாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கடந்த 11ம் தேதி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக தலைமை செயலாளரும் கடந்த 9, 12, 13 ஆகிய தேதிகளில் தொடர்புடைய துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்த கூட்டத்தில், தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரினர்.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாட்டால் தொழில் துறை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நீக்கி அவர்களின் தொழில் சீராக நடைபெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அது வருமாறு:

* உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (எல்பிஜி) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்.

* எரிவாயு பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கவும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் எல்பிஜி, சிஎன்ஜி, டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கி வருகிறது. இந்நிறுவனங்கள் எல்பிஜி, சிஎன்ஜி போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்எண்ணெய், ஆர்டிஎப், எச்எஸ்டி, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள எல்பிஜி, சிஎன்ஜி பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது. இந்த இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

* எரிவாயு (எல்பிஜி) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகளை தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றியும், 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க தலைமை செயலாளர் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் பழனிசாமி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சிவராசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள், வணிகர்களுக்கும் சலுகைகள்

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய மானியத்துடன் கடன்.

* தொழிற்சாலைகள் மண்எண்ணெய், ஆர்டிஎப், எச்எஸ்டி, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்த தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெற தேவையில்லை.

* இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

* விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதி.

* இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்எண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.