சேலம்:இந்த மாதத்திற்கான காஸ் சிலிண்டர் புதிய விலை பட்டியலை, நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே, அதாவது சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879 என நீடிக்கிறது. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.24 முதல் ரூ.25.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,906 என இருந்த நிலையில், ரூ.25 குறைந்து ரூ.1,881 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ரூ.1,854.50ல் இருந்து ரூ.24.50 குறைந்து ரூ.1,830 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.24 குறைந்து ரூ.1,723.50 ஆகவும், மும்பையில் ரூ.24.50 குறைந்து ரூ.1,674.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.25.50 குறைந்து ரூ.1,826 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காமல், நிலையாக வைத்துக்கொண்டுள்ளனர். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.