சென்னை: தமிழ்மொழி அகாதெமி சார்பில் எச்.வி.ஹண்டே எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில், ‘நமது அரசியலமைப்பு: நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி செய்த மாற்றங்கள்’ மற்றும் ‘சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்’ ஆகிய நூல்களை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கே.ஜெயசந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வி.ஜி.பி. குழுமத்தின் நிறுவனர் வி.ஜி.பன்னீர்தாஸ், பேராசிரியர் ஆசீர்வாதம் ஆச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
2019ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி வாரணாசி போகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அரசியலுக்கு வந்த பிறகு எடப்பாடி ஏன் போகவில்லை என்பதும் எனக்கு தெரியும். சீமான் அன்று சொன்னார், “எடப்பாடி ஒரு அடிமை, எப்பா… எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவீங்க” என்றார். “எடப்பாடி பதவியை விட்டு இறங்கினால் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்” என்று சீமான் கூறினார். அந்த வீடியோவை நான் வெளியில் விடவா? நான் 10 ஆண்டுகளாக காவல்துறையில் இருந்தேன்.
10 முதல் 15 ஆண்டுகள் விவசாயியாக இருந்திருக்கிறேன். மாணவனாக இருந்திருக்கிறேன். இதெல்லாம் அனுபவம் இல்லையா? எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். அவர் மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது. அதிமுகவில், 70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் “டை” அடித்துக் கொண்டு தங்களை இளைஞர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். மக்களிடம் பேசுவதிலும், செயலிலும்தான் இளமை இருக்கிறது. கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத்தான் போட்டியிட வேண்டும்.
எந்தப் பின்புலம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்பதை கண்டறிய செப்டம்பர், அக்டோபர் மாதம் முழுவதும் கிராமத்தை நோக்கி பாஜ பயணம் மேற்கொள்ள உள்ளது. கட்சியில் புதிதாக இணைய கூடிய நபர்களுக்கு பொறுப்பும் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாம் துரிதப்படுத்தப்படும்.
அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்
தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். செப்டம்பர் 2ம் தேதி முதல் தொடர்ந்து 13 வாரங்கள் சர்வதேச அரசியல் கல்வி தொடர்பான படிப்பை பயில உள்ளார். பல்கலைக்கழகமே அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. அண்ணாமலை இன்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார். லண்டனில் 3 மாதங்கள் தங்கி படிக்கும் அண்ணாமலை வரும் நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.