நன்றி குங்குமம் டாக்டர்
விலகிச் செல்லும் இதயங்கள்… தம்பதியர் நலன்!
சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு விவாகரத்து நடந்தது. இது இன்றைக்கு இயல்புதானே இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆனால், அது இரண்டாவது விவாகரத்து. கல்லூரியில் படிக்கும்போது ஒரு பையனை ஆசை ஆசையாய் காதலித்து மணம் செய்துகொண்டார். இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் அந்தப் பையனின் வீட்டினரது கலாசாரத்துக்கும் தான் பிறந்து வளர்ந்த வீட்டின் கலாசாரத்துக்கும் ஒத்து வரவில்லை என்று விவாகரத்து செய்தார். ஓராண்டுகள் கழித்து இன்னொரு மணமகனை அவரின் பெற்றோர் அழைத்துவந்தனர். அந்தத் திருமணமும் மூன்று ஆண்டுகள்தான். கணவனோடு தனக்கு செட்டாகவில்லை என்று விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனியாகவே இருக்கிறார். இனி எனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இன்று மேலைச் சமூகங்கள் போலவே இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் விவாகரத்துகள் மிக அதிகமாகிவிட்டன. அதிலும் நான் மேலே சொன்னது போல் இரண்டாவது விவாகரத்துகள்கூட மிக சகஜமாக நடக்கின்றன. விவாகரத்து சரியா, தவறா என்ற விவாதம் என்பது இங்கு தேவையில்லை. ஒவ்வொரு விவாகரத்திலும் வெவ்வேறு பிரச்னைகள் இருக்கலாம். எனவே, அனைத்தையும் பொதுமைப்படுத்தக் கூடாது.
இருப்பினும், நம் சமூகம் திருமணம் என்ற பந்தத்துக்கு இத்தனை நூற்றாண்டுகளாகக் கொடுத்து வந்த முக்கியத்துவம் இந்த தலைமுறையில் குறைகிறதோ என்கிற ஐயம் நமக்கு வருகிறது. எனவே, இந்த விவாகரத்துகளில் அதிகம் காணப்படும் காரணங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் முக்கியமான காரணங்கள் என்று பின்வருபவற்றை சொல்லலாம்.
1. பெண்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு: பெண் கல்வி என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனால், அவர்களின் வேலைவாய்ப்பும் அதிகரித்தும், அவர்களின் பொருளாதாரமும் உயர்ந்து அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இது விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் என்றால் யாரும் கோபப்படக்கூடாது. இது ஆரோக்கியமான விஷயம்தான். ஏனென்றால், முந்தைய காலகட்டங்களில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால்தான் அதிக விவாகரத்துகள் ஏற்படவில்லை. ஆண் – பெண் உறவில் இருக்கும் பிரச்னைகள் அப்போதும் இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆண்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களிடம் எழுந்த சட்ட ரீதியான விழிப்புணர்வால் விவாகரத்து அதிகரித்திருக்கிறது.
2. மனநிலை மாற்றம்: விவாகரத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை, விவாகரத்து என்பது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி போன்ற சமூக மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மறுமணம் உள்ளிட்ட பல வாய்ப்புகள் பெண்களும் சரி, ஆண்களும் சரி இருப்பதால் விவகாரத்தை யாரும் தவறு என்று நினைக்கவில்லை. அதனால் விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன.
3.காதல் திருமணங்கள் அதிகரிப்பு: முந்தைய சமூகங்களில் குடும்பத்தினர் பார்த்து செய்து வைப்பதால் திருமணத்தை முறித்துக்கொள்வதில் தம்பதியருக்கு பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில், தம்பதியர்கள் யாருக்காவதும் தயங்க வேண்டியதில்லை. தங்களுக்கு உறவில் அசௌகரியங்கள் நிலவினால் விவாகரத்து குறித்து முடிவெடுப்பது அவர்களின் கைகளிலேயே இருக்கிறது. இதுவும் ஒரு பிரதான காரணம்.
4.வாழ்க்கைமுறை மாற்றம்: தம்பதியர்கள் இருவருமே பணியில் இருக்கிறார்கள். அவர்களின் தொழில் ரீதியான வாழ்வில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள் எனும்போது உறவில் அதிக விரிசல் ஏற்படுகின்றன. எனவே, கணவன், மனைவிக்கு பரஸ்பரம் ஏற்படும் அன்யோன்யம் இல்லாமல் போய்விடுகிறது. தொழில் – இல்லறம் ஆகியவற்றை சரியாக நிர்வகிக்காவிட்டால் திருமண உறவு விவாகரத்துக்கு சென்றுவிடுகிறது.
5.ஈகோ பிரச்னை: திருமண உறவில் தம்பதியர் இருவருக்கும் நிலவும் ஈகோ பிரச்னைகளும் விவாகரத்திற்கான முக்கிய காரணம் எனலாம். இதில் பொருளாதாரம், வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களும் தாக்கம் செலுத்தும். இருப்பினும் இதுவும் முக்கிய காரணம் எனலாம்.
6.புரிதல் போதாமை: ஆண் பெண் இருவருக்குமே இன்று பரஸ்பர புரிதல் என்பது குறைந்திருக்கிறது எனலாம். இருவருமே தங்கள் இணையிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்களே அல்லாமல், அது கிடைக்காவிடில் சரி அனுசரித்துப் போவோம் என்ற மனநிலை இல்லை. மேலும், தங்கள் இணைக்கு என்ன தேவை என்று யோசித்து அதற்கு ஏற்ப தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருவருக்குமே இல்லாமல் போவது ஒரு முக்கிய காரணம். இதற்கு குழந்தை வளர்ப்பு முதல்கொண்டு பல காரணங்கள் இருக்கின்றன. இருவருமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால் இந்த அளவுக்கு பிரச்சனை முற்றாது.
7.உணர்வுரீதியாகப் பிரச்சனையைக் கையாளுதல்: இது ஒரு முக்கியமான காரணம். திருமணம் என்பது உணர்வுப்பூர்வமான பந்தம். அங்கு உணர்வும் இருக்கும் அறிவும் இருக்கும். ஆனால், இந்த பந்தத்தில் உருவாகும் பிரச்சனைகள், விரிசல்கள் என்பவை உணர்வுப்பூர்வமான விஷயங்களில்தான் ஏற்படுகிறது. ஆணோ பெண்ணே இருவருமே திருமணம் என்ற பந்தத்தில் உருவாகும் பிரச்சனையை உணர்வுப்பூர்வமாகக் கையாளக் கூடாது.
இயன்றவரை கொஞ்சம் அறிவார்த்தமாகச் செயல்பட்டு, விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் விடவும் திருமணம் என்ற பந்தம் முக்கியம். குடும்பம் என்ற அமைப்பு முக்கியம் என்ற மனநிலை அவசியம். என் நலம்தான் முக்கியம். என் உணர்வுகள், என் சுதந்திரம்தான் முக்கியம் என்று உணர்ச்சிவசப்படும்போது, பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும்.
8.ஆண் பெண் உறவில் சமநிலையின்மை: நம் சமூகம் சுதந்திரம் அடைந்த பிறகே பழைய சமூகக் கட்டமைப்பில் இருந்து விடுபட்டு விட்டது. முந்தைய சமூகங்கள் போல ஆணுக்குப் பெண் அடிமை இல்லை. பெண் கல்வி, பெண்ணுக்குச் சொத்தில் சம உரிமை எல்லாம் நாம் கொடுத்துவிட்டோம். பெண்ணும் வேலைக்குச் செல்கிறாள். யாரின் உதவியும் இன்றி தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற சிந்தனை ஆணைப் போலவே பெண்ணுக்கும் இன்று இருக்கிறது.
இதை ஆண்கள் உணர வேண்டும். முந்தைய தலைமுறை போல இருக்க வேண்டும். என் பாட்டி போல, என் அம்மா போல என் மனைவியும் எனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவதில் பலனில்லை. பெண்ணுக்கான சம உரிமையை ஆண் தராது இருப்பது இன்று மிகப் பெரிய பிரச்சனை. இது இன்றைய விவாகரத்துக்குகளுக்கு முக்கிய காரணம்.
9.ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள்: குடி ஒரு சமூகக் கேடு. அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, ஒழுங்காக வீட்டுக்கு காசு தராமல் குடும்பத்தை மனைவியை மதிக்காமல் ஊர் சுற்றும் கணவனை பெண்கள் சகித்துக்கொண்டு வாழ்ந்தது ஒரு காலம். இன்று அப்படி இல்லை. குடி என்பது குடும்பம் எனும் குடியைக் கெடுக்கும் ஆபத்தான விஷயம். இதில் ஒழுங்காக இல்லாத கணவனை மன்னிக்க மனைவி தயாரில்லை. அதிலும் குறிப்பாக, அந்தப் பெண்ணும் வேலைக்குச் செல்பவர் என்றால் தயங்காமல் விவாகரத்து செய்பவராக இருக்கிறார்.
குறைந்தபட்சம் கணவனை விலக்கிவிட்டு, குடும்பத்தை நடத்துபவராக இருக்கிறார். அது போலவே திருமணம் கடந்த உறவும் ஒரு பிராதான காரணம். இன்னொரு ஆணோடு மனைவியோ, இன்னொரு பெண்ணோடு கணவனோ மணம் கடந்த பாலியல் உறவு வைத்திருக்கும்போது, அதை இணையால் தாங்க இயல்வதில்லை. முந்தைய சமூகங்களில் இதை எல்லாம் எப்படியோ சகித்துக்கொண்டு இருந்தார்கள். இன்று அந்த மணவாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் அளவுக்கு இதைத் தீவிரமாகப் பார்க்கிறார்கள்.
10.சமூக ஏற்பு: விவாகரத்தான பெண்கள், சிங்கிள் மதர் போன்ற தனியர்களை இந்த சமூகம் முந்தைய சமூகங்கள் போல ஏளனமாகப் பார்ப்பதில்லை. அவர்களை நோக்கும் பார்வையில் இன்னமும் முன்னேற்றம் வர வேண்டும் என்ற போதிலும் முந்தைய சமூகங்கள் போல அவர்களை விலக்கி யோசிப்பதில்லை. மேலும், விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணமும் நடப்பதில்லை முந்தை காலங்கள் போல் சிக்கல் இல்லை என்பதால் விவாகரத்துகள் அதிகமாக நடக்கின்றன.
எது எப்படி இருந்தாலும் இரு மணங்கள் இணைந்து வாழ்வதே திருமணம் எனும் ஏற்பாட்டின் ஆதாரம். தாம்பத்தியம் எனும் அழகான ஏற்பாடு, குடும்பம் என்ற அமைப்பைக் கட்டிக்காக்க சமூகம் என்ற மாபெரும் அமைப்பை பராமரிக்க மிகவும் அவசியம். இதற்கு மனமொத்த தம்பதிகள் அவசியம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துக்கொண்டு, பரஸ்பரம் அனுசரித்து வாழ்தலே ஆனந்தம். எல்லோருக்கும் அவரவர் மனசு போல ஆசைப்பட்ட இணை வாய்க்கவே வாய்க்காது.
எல்லா தோசையிலும் ஓட்டையிருக்கும் என்பது போல எல்லா மனிதர்களிடத்தும் குறைகள் இருக்கும். குறைகளை நோக்காது, ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாய் இருந்து எப்படி இணைந்து வாழ்வது என்று யோசித்தாலே இல்லறம் என்பது நல்லறமாகும்.
விவாகரத்துகள் ஒரு டேட்டா…
*சென்னையில் ஏற்கெனவே நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள்தான் இருந்தன. தற்போது அது எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
*தமிழ்நாட்டில் உள்ள நாற்பது குடும்ப நல நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாகச் சேர்க்க வைக்கக் கோருதல், பரஸ்பர பிரிவு என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
*இதில், 17 ஆயிரத்து 638 வழக்குகள் கடந்த ஓர் ஆண்டில் தாக்கலானவை.
*கடந்த ஓராண்டில் மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
*கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் மூன்று மடங்கு விவாகரத்து வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன.
*சென்னையைப் பொறுத்த வரை கடந்த ஓராண்டில் இரண்டாயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தொகுப்பு: சரஸ்