நன்றி குங்குமம் தோழி
மணப்பெண் மேக்கப் இனி ஈஸி!
பொதுவாக திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களது வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகும். அன்றைய நாளில் தன்னை அழகாக காண்பிக்க, விதவிதமான ஆடைகள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல தேடல்கள் இருக்கும். அந்தவகையில் திருமண வரவேற்புகளில் தங்களை தனித்து காட்டும் மேக்கப்க்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காகவே, தற்போது புதிய மேக்கப் முறைகள் பல அறிமுகமாகிவிட்டன. உதாரணமாக, நேச்சுரல் மேக்கப், வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் என பல வகைகள் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நேச்சுரல் மேக்கப்
மேக்கப் செய்ததே தெரியாதபடி மிகவும் மென்மையாகவும், எளிமையாகவும் செய்யப்படுவதே நேச்சுரல் மேக்கப். இது தனது தோற்றத்தை மாற்றாமல் இயல்பான அம்சங்களை மேம்படுத்தவும் விரும்பும் மணப்பெண்ணுக்கானது. இது பல அடுக்கு மேக்கப்பைக் கொண்டிருக்கவில்லை மற்றும் வண்ணங்களை மிகைப்படுத்தாமல் அழகான தோற்றத்தை மேம்படுத்துகிறது.
வாட்டர் ப்ரூஃப் மேக்கப்
வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பில், முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் எளிதில் கலையாமல் இருக்கும். இந்த வகை மேக்கப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற மேக்கப்பாகும். திருமண வரவேற்பு அறையில் போதிய அளவு காற்றோ அல்லது ஏசியின் குளிர்தன்மையோ குறைவாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் மேக்கப் போட்ட சில மணி நேரங்களிலேயே சிலருக்கு வேர்க்கத் தொடங்கிவிடும். இதனால், போட்ட மேக்கப் விரைவிலேயே கலைந்து திட்டுதிட்டாக காணப்படும். அதுபோன்று ஆகாமல் இருப்பதற்கு இந்த வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பை பயன்படுத்துகிறார்கள். சுமார் 12 மணி நேரம் வரை இந்த மேக்கப் கலையாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.
ஏர் பிரஷ் மேக்கப்
ஏர் பிரஷ் மேக்கப் என்பது தனி வகை. இது ஏர் கம்ப்ரசர் அல்லது ஏர் கன் உதவியுடன் அழகு சாதன தயாரிப்புகளை முகத்தில் தெளிக்கப்படுவதாகும். பொருட்கள் மெல்லிய அடுக்குகளில் தெளிக்கப்படுவதால், இது முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத்திட்டுகள் ஆகியவற்றை மறைத்து முகத் தோற்ற்த்தை எடுத்துக்காட்டுவதோடு முகம் முழுக்க ஒரே கலரில் அழகாக தோன்றும் வகையில் இருக்கும். மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தழும்புகள், மருக்கள் நிறைந்த முகத்திற்கு ஏற்ற மேக்கப் இது.
எச்.டி மேக்கப்
நேச்சுரல் மேக்கப் மற்றும் எச்.டி மேக்கப் ஆகியவை ஒரே மாதிரியான பயன்பாட்டு நுட்பங்களைக் கொண்டுள்ளன. இருந்தாலும், ஒரே வித்தியாசம் என்னவென்றால், எச்.டிமேக்கப் மிகவும் இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது. நிலையான பூச்சுடன் ஒப்பிடும் போது, இது முகத்தை மங்கலாக்காமல், தோலின் குறைபாடுகளை நீக்குகிறது. மேலும், இந்த வகை மேக்கப் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை. இது முகத்தை வண்ணமயமாக காட்டும். இந்த மேக்கப் வகையை பெரும்பாலும் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இது சீரற்ற சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற மேக்கப்பாகும்.
கான்டூரிங் மேக்கப்
கான்டூரிங் மேக்கப் என்பதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் சொல்வது உண்டு. அதாவது, சப்பையான நாசியை எடுப்பாகக் காட்டவும், சற்று பூசினாற் போல இருக்கும் கன்னங்களை ஒல்லியாக காட்டவும் இது உதவும். உதாரணமாக, ஒருவரின் முகத்தை நீளமாகவோ, குறுகலாகவோ அல்லது விரும்பிய வடிவில் தோற்றத்தை உருவாக்க உதவும் மேக்கப்பாகும். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், இது முகத்தை வேண்டிய வடிவில் செதுக்கும் கலைநயம் மிக்க மேக்கப்பாகும். இந்த மேக்கப்பில் சிலர் விதவிதமான வண்ணங்களையும் அதிகம் பயன்படுத்துவார்கள்.
மேட் மேக்கப்
மேட் மேக்கப் என்பது முகத்திற்கு முற்றிலும் மேட் ஃபினிஷ் கொடுக்கும் ஒரு வகை மேக்கப் ஆகும். இந்த மேக்கப்பில் திரும்பத் திரும்ப டச்-அப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும் தன்மை கொண்டது. மேலும், அதிக பளபளப்பு இல்லாமல் மேட் ஃபினிஷிங்கை கொடுக்கும். மேலும், இந்த மேக்கப் சருமத்தை மிருதுவாகவும் கச்சிதமாகவும் தோற்றமளிக்க செய்யும்.
தொகுப்பு: ரிஷி