“எந்த கம்பெனிக்கு வேலைக்கு போனாலும் மாசத்துக்கு நாற்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரைக்கும்தான் சம்பளம் கொடுப்பாங்க. இந்த பாலிஹவுஸ் விவசாயத்துல வருசத்துக்கு 40 லட்சம் சம்பாதிக்குறேன்’’ அஜிஸ் கலந்தரின் இந்தக்கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. பெங்களூரில் ரூ.40 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்த அஜிஸ் இப்போது ஆண்டுக்கு 40 லட்சம் வருமானம் பார்க்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள அத்திமுகம் கிராமத்திற்கு சென்றால் நீங்கள் இதை சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவீர்கள். பசுமைக்குடிலுக்குள் அறுவடை செய்யப்பட்டு குவித்து வைக்கப்படும் குடைமிளகாய்கள் அதை உண்மைதான் என்று ஆமோதிக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள் போல் காய்த்துத் தொங்கும் குடைமிளகாய்களை தனது தந்தை முகம்மது ஜான் மற்றும் தொழிலாளர்களோடு அறுவடை செய்துகொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் அஜிஸ் கலந்தரை சந்தித்தபோது மேலும் எங்களிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“எங்கள் பகுதி தொடர்ச்சியாக விவசாயம் நடக்கும் வளமான பகுதி.
மற்ற விவசாயிகளைப் போல எங்க அப்பாவும் கேரட், பீட்ரூட், கொத்தமல்லின்னு பயிர் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நான் இன்ஜினியரிங் படிச்சிட்டு 2018ல இருந்து பெங்களூர்ல ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். அது ஒரு மெடிக்கல் காலேஜ்ங்குறதால கொரோனா சமயத்துல ஏதாவது ஆகிடப்போகுதுன்னு எங்க அப்பா உடனே ஊருக்கு வரச்சொல்லிட்டாரு. அப்போ ஊருக்கு வந்த என்னை அதுக்கப்புறம் எங்கேயும் அனுப்பலை. நானும் இங்கேயே ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சேன். அந்த சமயத்துலதான் சூளகிரி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் சார் பாலிஹவுஸ் பத்தி எடுத்து சொன்னாரு. உடனே அதுக்கான பிராசஸை ஆரம்பிச்சி ஒரு ஏக்கர் நிலத்துல பாலிஹவுசையும் அமைச்சிக் கொடுத்தாங்க. கரெக்டா 2021ல பாலிஹவுசை அமைச்சோம். மொத்தமா 40 லட்சம் செலவாச்சி. அதுல 6 லட்சத்து 88 ஆயிரம் தமிழ்நாடு அரசோட மானியமாக கிடைச்சது. பாலிஹவுஸ் போட்டவுடனே குடைமிளகாயைத்தான் சாகுபடி செஞ்சோம். அடுத்த வருசமும் குடைமிளகாயே பயிர் செஞ்சோம். அதுக்கடுத்து செண்டுமல்லி போட்டோம். இப்போ 3வது முறையா குடைமிளகாய் வச்சிருக்கோம்’’ என்றவரிடம் குடைமிளகாய் சாகுபடி விபரங்கள் குறித்து கேட்டோம். அறுவடை செய்யப்பட்ட குடைமிளகாய்களை ஒன்றாக குவித்தபடியே பேச்சைத் தொடர்ந்தார்.
“குடைமிளகாயை சாகுபடி செய்ய முதல்ல நிலத்தை நல்லா கட்டியில்லாம பொலபொலப்பா மாத்தணும். அதுக்காக 5 முறை 5 கலப்பை போட்டு நல்லா உழுது, அதுக்கப்புறம் ரோட்டோவேட்டர் போட்டு உழுவோம். கடைசி உழவு ஓட்டும்போது ஆட்டு எருவையும், மாட்டு எருவையும் கலந்து நிலத்துல போடுவோம். உழவு முடிஞ்சபிறகு 8 மீட்டருக்கு 5 பெட் அமைப்போம். ஒரு பெட்ல 500-600 செடி நடுவோம். நடவுக்கு முன்னாடி சொட்டுநீர் மூலமா ஒரு நைட் ஃபுல்லா தண்ணி பாய்ச்சி நிலத்தை ஈரமாக்கி வைப்போம். மறுநாள் காலையில அந்த ஈரத்துலதான் நடவு செய்வோம். அதுவும் காலை 6 மணிக்கு ஸ்டார்ட் பண்ணி 10 மணி வரைக்கும்தான் நடுவோம். அதுக்கப்புறம் மாலை 5 மணிக்கு தொடங்கி நைட் 7 மணி வரைக்கும் நடுவோம். பகல் நேரத்தில் வெயில் இருக்கும்போது நடக்கூடாது. அந்த சமயத்துல மண்ணோட சூடு தாக்கி செடிகள் கருகிடும். இதோட வேர் ரொம்ப சாஃப்டா இருக்கும். நடும்போது செடிக்கு செடி ஒன்னேகால் அடியும், வரிசைக்கு வரிசை 2 அடியும் இடைவெளி கொடுப்போம். நடவுக்கான விதைகளை தனியார்கிட்ட வாங்கி ஒரு நர்சரியில கொடுப்போம். அவங்க 40 நாள் வரைக்கும் வளர்த்து நமக்கு கொடுப்பாங்க. நாம அதை வாங்கிட்டு வந்து நட ஆரம்பிக்கலாம்.
நட்ட 15 நாள் வரைக்கும் எந்த வேலையும் இருக்காது. 15வது நாள்ல ஹியூமிக் ஆசிட்டை சொட்டுநீர்ல கலந்து கொடுப்போம். அதுக்கப்புறம் 5 நாள் கழிச்சி நெமிட்டோட் மருந்தை சொட்டுநீர்ல கொடுப்போம். இது வேர்ல கட்டி வராம பார்த்துக்கும். 25வது நாள்ல கால்சியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட்டை ட்ரிப்ல கொடுப்போம். 4 நாள் கழிச்சி மோனோ பொட்டாசியம் பாஸ்பேட்டை அதேமாதிரி கொடுப்போம். இதுல கருப்புகலர்ல ஒரு பூச்சி வரும். அதுக்கு இன்டர்பெட், கீ பான் மருந்துகளை 1 லிட்டர் தண்ணியில 1 எம்எல் கலந்து தெளிப்போம். 30 நாள்ல பூ வர ஆரம்பிக்கும். அந்த சமயத்துல பூ உதிராம இருக்க ப்ளோராமைட் மருந்தை 1 லிட்டர்- 1 எம்எல்னு கலந்து தெளிப்போம். 3 நாள் கழிச்சி பிஞ்சுகள் வளர பொட்டாசியம் ேஷாட்நெட், கேல்மாக்ஸ் மருந்துகளை ஏக்கருக்கு 300 எம்எல் டிரிப்ல கலந்து கொடுப்போம். இலையோட கீழ்ப்பகுதில உட்கார்ந்து சேதத்தை உண்டாக்குற வெள்ளை நிற பூச்சிகளைக் கட்டுப்படுத்த மெய்டன்ங்குற மருந்தை கம்(gum)ல கலந்து தெளிப்போம். உரங்களை மாசத்துக்கு 4, 5 முறை கொடுப்போம். 30வது நாள்ல களையெடுப்போம். 40வது நாள்ல செடிகளை சணல் வச்சி கட்டுவோம்.
இதுமாதிரி பராமரிச்சிட்டு வந்தோம்னா 85-90 நாள்ல முதல் அறுவடையை ஆரம்பிக்கலாம். அதுல இருந்து 4 இல்லன்னா 5 நாளுக்கு ஒரு தடவை அறுவடை பண்ணுவோம். நாங்க சாகுபடி செஞ்சிருக்கிறது மஞ்சள், சிவப்புன்னு ரெண்டு கலர்ல வரும். முதல்ல பச்சை கலர்லதான் காய் வரும். அதுக்கப்புறம் கலர் மாறும். காய்கள்ல 70 சதவீதம் கலர் வரும்போது அறுவடை செய்வோம். 11 மாச பயிர் இது. 3வது மாசத்துல தொடங்குற அறுவடையை 11வது மாசம் வரைக்கும் தொடரலாம். அறுவடை செஞ்ச காய்களை அங்கங்க குவிச்சி வைப்போம். வியாபாரிகள் எங்க வயலுக்கே வந்து ஏ,பி,சின்னு சைஸை அடிப்படையா வச்சி தரம் பிரிச்சி அதுக்கேத்த பணத்தைக் கொடுத்துட்டு
காய்களை எடுத்துட்டு போவாங்க. ஏ கிரேடு காய்ங்க ஒரு வருசத்துக்கு மொத்தமா 35 டன் மகசூலா கிடைக்கும். இதுக்கு 30 லிருந்து 300 ரூபாய் வரை விலை கிடைக்கும். சராசரியா 80-90 கிடைக்கும். பி கிரேடு 10 டன் வரைக்கும் கிடைக்கும். இதுக்கு விலை 15-150 ரூபாய். சராசரி விலை 40. சி கிரேடு 50 பெட்டி கிடைக்கும். பெட்டிக்கு சராசரியா 150 ரூபாய் விலை கிடைக்கும். வருசத்துக்கு மொத்தமா 40-45 லட்சம் குடைமிளகாய் மூலமா வருமானம் கிடைக்கும். 15 லட்சம் செலவாகும். அதுபோக 25-30 வரை லட்சத்தை லாபமா பார்க்கலாம். நான் வேலையை விட்டது சரிதானுங்க? என கேள்வியோடு புன்னகைத்தார்.
தொடர்புக்கு:
அஜிஸ் கலந்தர் – 90199 78787.
தமிழ்நாட்டில் பச்சை நிற குடை மிளகாயைத்தான் விரும்புகிறார்கள். வட மாநிலங்களில் கலர் கேப்சிகத்திற்குத்தான் நல்ல கிராக்கி. நாம் ஃப்ரைடு ரைஸ் போன்ற ஒரு சில உணவுகளுக்குத்தான் குடை மிளகாயைப் பயன்படுத்துகிறோம். நாம் கத்தரிக்காய், முருங்கைக்காய் பயன்படுத்துவதைப்போல வட மாநிலங்களில் அனைத்து குழம்பு, பொரியல், கூட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்.
ஓசூர், சூளகிரி பகுதியில் விளைவிக்கப்படும் கலர் குடைமிளகாய்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதை பெங்களூர் மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து டெல்லி ஆசாத் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எந்தப் பயிராக இருந்தாலும் மழைநீர் படும்போது நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்கும். பாலிஹவுஸில் மழைநீர் கிடைக்காது என்பதால், மழைநீரை சேகரித்து சொட்டுநீர் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் குடைமிளகாய்களுக்கு நல்ல ஷைனிங் கிடைக்கிறது.
பச்சை நிற குடைமிளகாய் கிலோ ரூ.60க்கு மேல் போகாது. ஆனால் இந்த கலர் கேப்சிகத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது.