நந்தூர்பார்: “அரசியல் சாசன புத்தகத்தின் நிறம் முக்கியமில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். தேர்தல் பிரசாரங்களில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் வெறும் வெற்று தாள், அதன் சிவப்பு நிறம் நகர்ப்புற நக்சல்களின் நிறம்” என மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நந்தூர்பார் நகரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி பாஜவுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “நான் காட்டும் அரசியலமைப்பு புத்தகம் வெறும் அட்டை. அதனுள் எதுவுமில்லை என மோடி சொல்கிறார். மோடிக்குதான் அது காலியாக உள்ளது. ஏனென்றால் மோடி தன் வாழ்நாளில் இதுவரை அரசியல் சாசன புத்தகத்தை படிக்கவில்லை. அதேபோல் நான் காட்டும் புத்தகத்தின் நிறம் சிவப்பாக உள்ளதால் நகர்ப்புற நக்சல்களுடன் காங்கிரசை சேர்த்து பாஜ அரசியல் செய்கிறது. அரசியலமைப்பு சட்டப்புத்தகம் சிவப்பா, நீலமா என்பது முக்கியமில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம்.
அரசியலமைப்பில் உங்களுக்கு பழங்குடியினர் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் உங்களை வனவாசி என்கின்றனர். பழங்குடியினருக்கும், வனவாசிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. பழங்குடியின குழந்தைகள் படிப்பதை விரும்பாத பாஜ அரசு அவர்களை காடுகளுக்குள் அடைத்து வைக்க முயற்சிக்கிறது” என காட்டமாக தெரிவித்தார்.