புதுடெல்லி: எங்கள் மகள்களின் குங்குமத்தை துடைத்தவர்களுக்கு பாக். மகளை வைத்து பதில் அளித்தோம் என்று மபி அமைச்சர் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது குறித்த ஊடக சந்திப்புகளின் போது முக்கிய முகமாக இருந்தவர் கர்னல் சோபியா குரேஷி. அவரைப்பற்றி மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ‘எங்கள் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை துடைத்தார்கள். பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவர்களின் சகோதரியை அனுப்பினோம்’ என்று தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்துகட்சிகளும் தெரிவித்தன.
மபி அமைச்சர் பேச்சை காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டித்துள்ளார். அவர் கூறுகையில்,’ பஹல்காமில் பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்க விரும்பினர், ஆனால் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஒன்றுபட்டது. பாஜ-ஆர்எஸ்எஸ்ஸின் மனநிலை எப்போதும் பெண்களுக்கு எதிரானது. முதலில், பஹல்காமில் வீரமரணம் அடைந்த கடற்படை அதிகாரியின் மனைவியை சமூக ஊடகங்களில் கிண்டல் செய்தனர். பின்னர் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் மகளை துன்புறுத்தினர். இப்போது பாஜ அமைச்சர்கள் நமது துணிச்சலான சோபியா குரேஷியைப் பற்றி இதுபோன்ற அநாகரீகமான, அவமானகரமான, வெட்கக்கேடான, மோசமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அத்தகைய அமைச்சரை உடனடியாக மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார்.
காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, ‘முற்றிலும் மன்னிக்க முடியாதது. இந்த போலி தேசியவாதிகள் நமது துணிச்சலான ஆயுதப் படைகள் மீது மரியாதை காட்டுவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா கூறுகையில்,’பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய இந்தியப் படைகளின் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம், அதில் எங்கள் சகோதரிகளின் நெற்றியில் இருந்து குங்குமம் துடைக்கப்பட்டது. எனது கருத்துக்களைத் திரித்துக் கூறுபவர்களுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர் (குரேஷி) எங்கள் கவுரவத்தை உயர்த்திய ஒரு சகோதரி, அதை வேறு எந்த சூழலிலும் பார்க்கக்கூடாது. நாங்கள் அவரை மதிக்கிறோம், தொடர்ந்து அதைச் செய்வோம்’ என்றார்.