திருமலை: சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி நேற்று தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், நேற்றிரவு ஆந்திர மாநிலம் குண்டூரில் உணவுக்காக ஓட்டல் அருகே நின்றது. அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் அன்னப்பரெட்டிகுடம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிரே வந்த பைக் மீது மோதியது.
பின்னர் அருகே உள்ள நெல் வயல் சேற்றில் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் பைக்கில் வந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளான ராதேஷ் (23), ஷியாம் (28) ஆகிய இருவரும் அதே இடத்தில் இறந்தனர். மேலும் அதே பைக்கில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார். பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் இல்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.