புதுடெல்லி: உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை அடிக்கடி விமர்சித்து வந்த நிலையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வாலை நியமித்து பிரதமர் மோடி பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். அருணாசலப்பிரதேசத்தில் இருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கிரண் ரிஜிஜூ பாஜ அரசில் உள்துறை இணை அமைச்சர், சிறுபான்மை துறை இணை அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் உள்ளிட்ட இலாகாக்களை வகித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ரிஜிஜூ ஒன்றிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறைக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். கொலிஜியம் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சாடினார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் தேசவிரோத கும்பலுடன் இருப்பதாகவும் விமர்சித்து இருந்தார். அவரது கருத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பரிந்துரையின்பேரில் ஒன்றிய அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் கொலிஜியம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அவர் புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டம் மற்றும் நீதித்துறைக்கு இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கவனித்து வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சார துறையுடன் சேர்த்து சட்டத்துறை அமைச்சராகவும் செயல்படுவார்” என ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் காலையில் நடந்தது. இந்நிலையில், பிற்பகல் மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்து இருப்பதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ்பி பாகல் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜூன் ராம் மேக்வால், சட்டத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் மூன்றாவது நபராவார். ரிஜிஜூக்கு முன்னர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.
* நீதித்துறையுடன் மோதல் இல்லை
ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மேக்வால், ‘‘அனைவருக்கும் விரைவான நீதியை உறுதி செய்வதே எனது முதன்மையான முன்னுரிமையாகும். அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நல்லுறவு உள்ளது” என்றார்.
* தோல்வியுற்ற சட்ட அமைச்சர் எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘தோல்வியடைந்த சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றப்பட்டுள்ளார். புவி அறிவியலில் அவரால் என்ன செய்ய முடியும்? அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக கண்ணியமான முறையில் செயல்படுவார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ‘‘சட்டம் அல்ல இப்போது புவி அறிவியல் துறை அமைச்சர். சட்டங்களுக்கு பின்னால் உள்ள அறிவியலை புரிந்து கொள்வது எளிதானது அல்ல. இப்போது அறிவியலின் விதிகளை பிடிக்க அவர் முயற்சிப்பார். வாழ்த்துக்கள் நண்பரே” என குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில்,‘‘ரிஜிஜூ புவி அறிவியல் அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள சாத்தியமான காரணங்கள் என்ன, மகாராஷ்டிரா மீதான சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு காரணமா? அல்லது மோதானி-செபி விசாரணையா?’ என்று கேள்வி எழுப்பினார்.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘கிரண் ரிஜிஜூ மீதான நீதித்துறையின் அதிருப்தியை அரசு கவனத்தில் கொண்டுள்ளது, அதனால் தான் ஒன்றிய சட்ட அமைச்சகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது நீதித்துறைக்கான வெற்றியாகும்” என்றார்.