புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்த, சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கான 4 நீதிபதிகளை நியமிப்பதில், ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கையாண்டு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம், வரும் 10ல் முடிகிறது. இவர் தலைமையில் அமைந்த 3 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், கடந்த 2023, ஜனவரியில் கூடியது.
அக்கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, வழக்கறிஞர் ஜான் சத்யன், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக, வழக்கறிஞர் சவுரவ் கிர்பால், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, வழக்கறிஞர்கள் அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் ஆகியோரை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. அதே மாதம் இரண்டாம் முறையாக மீண்டும் கூடிய கொலீஜியம், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் ஆகியோரை, காலந்தாழ்த்தாமல் நீதிபதிகளாக உடனடியாக நியமிக்கும்படி வலியுறுத்தியது.
அதேபோன்று, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக, வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இவர், கடந்தாண்டு, நவம்பரில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 22 மாதங்கள் கடந்த பின்பும், ஜான் சத்யன், சவுரவ் கிர்பால், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் ஆகிய நான்கு பேரை நீதிபதிகளாக நியமிக்காமல் ஒன்றிய அரசு காலந்தாழ்த்தி வருகிறது.
கொலீஜியம் பரிந்துரைத்துள்ள வழக்கறிஞர் அமிதேஷ் பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.சி.பானர்ஜியின் மகன். 2002ல் கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பில், 58 கரசேவகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சதி நோக்கம் உள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட கமிஷன் தலைவராக யு.சி.பானர்ஜி செயல்பட்டார்.
பரிந்துரையில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர் சக்யா சென், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஷ்யாமல் சென்னின் மகன். ஷ்யாமல் சென், மேற்கு வங்க கவர்னராகவும் பணியாற்றினார். சந்திரசூட் ஓய்வை அடுத்து, வரும், 11ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவி ஏற்கிறார். இவர், 2025, மே, 13 வரை, இப்பதவியில் நீடிப்பார்.