சென்னை: சென்னையில் கிரிண்டர் ஆப் மூலம் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதை பொருட்களை பயன்படுத்துவதால், ‘கிரிண்டர் ஆப்’-ஐ ஆன்லைன் ரம்மி போன்று தனிசட்டம் இயற்றி தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒஜி வகை கஞ்சா, மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப் பொருட்களை கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் இடையே போலீசாருக்கு தெரியாமல் தடையின்றி கொண்டு செல்ல, போதை பொருள் கும்பல் கடந்த சில மாதங்களாக புதிய யுக்தியாக ‘கிரிண்டர் ஆப்’ மூலம் விற்பனை செய்து வருகிறது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான பிரத்யேக ஆப் தான் கிரிண்டர். சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சென்னை காவல்துறையில் புதிதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு தொடங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 8 மாதங்களில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் 1,044 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 824 கஞ்சா வழக்குகள் மற்றும் மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்ததாக 108 வழக்குகள் பதிவு செய்து 464 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தொடர் நடவடிக்கையால் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தலை 98 விழுக்காடு கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனாலும் மெத்தாம்பெட்டமின் என்ற போதை பொருள் எப்படி கட்டுப்படுத்தினாலும் தடையின்றி வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் இருப்பதை காண முடிகிறது.
மெத்தாம்பெட்டமின் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட 464 பேரில் 232 பேர் ‘கிரிண்டர் ஆப்’ பயன்படுத்தி அதன் மூலம் இந்த போதைப்பொருளை விற்று வந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்வதாக சென்னை பெருநகர காவல்துறை அடையாளம் கண்டுள்ள 71 கும்பலை சேர்ந்த 548 பேர் ‘கிரிண்டர் ஆப்’ மூலம் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு மெத்தப்பெட்டமைன் விற்று வந்ததுள்ளனர். சென்னையில் போதை பொருள் விற்பனைக்கு தான் ‘கிரிண்டர் ஆப்’ பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்து இருந்த போலீசாருக்கு, மற்றொரு இடியாக கிரிண்டர் ஆப்-ஐ கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவத்திற்கும் பயன்படுத்துவது போலீசாருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் சென்னை எம்.ேக.பி. நகர் பகுதியில் 26 வயதான இளம் தொழிலதிபர் ஒருவர் தனது பெற்றோர் வெளியூர் சென்று இருந்த நிலையில் ‘கிரிண்டர் ஆப்’ மூலம் பழக்கமான ஓரினச்சேர்க்கையாளர் ஜெயந்திநாதன் (34) என்பவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஒன்றாக இருந்துள்ளார். அப்போது இளம் தொழிலதிபரும் ஓரினச் சேர்க்கையாளரும் மெத்தாம்பெட்டமின் பயன்படுத்தியுள்ளனர். இதை கிரிண்டர் ஆப் உதவி மூலமே இருவரும் வாங்கியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு கடந்த 14ம் தேதி இளம் தொழிலதிபர் மீண்டும் ஒரினச்சேர்க்கைக்காக ஜெயந்திநாதனை அழைத்து ஒன்றாக இருந்த போதுதான், இளம் தொழிலதிபரை தன்னுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி 30 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோல் கைது செய்யப்பட்ட ஜயந்திநாதன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ‘கிரிண்டர் ஆப்’ மூலம் தன்னுடன் தொடர்பில் இருந்த பல தொழிலதிபர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே தன்பாலினத்தவர்களுக்கான உருவாக்கப்பட்ட ‘கிரிண்டர் ஆப்’ போதை பொருள் கடத்தலுக்கு மட்டும் அல்லாமல் தற்போது குற்ற செயலுக்கும் பயன்படுத்தியது ஆதாரப்பூர்வமான நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ‘கிரிண்டர் ஆப்’ உடனே தடை செய்ய பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோர்கள் இடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த செயலியை தடை செய்ய வில்லை என்றால் இளைய தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இது ஆன்லைன் ரம்மி போல் அபாயகரமானது. எனவே ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது போல இதற்கும் சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்;
மெத்தாம்பெட்டமின், ஓஜி வகை கஞ்சாவை கல்லூரி மாணவர்கள்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்களும் அவர்களை நன்கு கண்காணிக்க வேண்டும்.
வழக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக, வித்தியாசமாக நடந்துகொள்வார்கள். இதன் மூலம் போதைப்பொருளை பயன்படுத்துவதை
அறியலாம். பெற்றோர் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
கிரிண்டர் ஆப்க்கு தடை விதிக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அருண் கடிதம்;
சென்னையில் போதை பொருள் விற்பனைக்கு கிரிண்டர் ஆப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே கிரிண்டர் ஆப்பை தடை செய்தால் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என்று அதற்கான ஆதாரங்களுடன் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான சேர்ட் (CERT)க்கு கடிதம் எழுதியுள்ளார்.
‘கிரிண்டர் ஆப்’ பயன்பாட்டில் இந்தியா முதலிடம்;
தன்பாலினத்தவர்களுக்காக கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘கிரிண்டர் ஆப்’ தொடங்கப்பட்டது. இந்த செயலியை உலக முழுவதும் தற்போது 1.35 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கிரிண்டர் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக அளவில் இந்தியா முதல் இடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் மும்பை முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது. கிரிண்டர் ஆப் வரவால் சென்னையில் எப்போது இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்பாலினத்தவர்கள் (ஓரினச்சேர்க்கையாளர்கள்) இணைந்துள்ளனர். இது ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி என்றாலும், இந்த கிரிண்டர் ஆப்பை தவறாக பயன்படுத்தி போதை பொருள் விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களுக்கு சமூக விரோதிகள் பயன்படுத்துவது வேதனையாக இருந்து வருகிறது.