திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவரை கட்டையால் அடித்து கொன்ற வழக்கில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அன்புநகரை சேர்ந்த முத்துகுமார் மகன் ரஞ்சித் கண்ணன் (17). திருச்சியில் உள்ள கல்லூரியில் வேதியியல் 3ம் ஆண்டு படித்து வந்த இவர், ஸ்ரீரங்கம் புஸ்பக் நகர் கீதாபுரத்தை சேர்ந்த அத்தை சாந்தியின் (52) வீட்டிற்கு கடந்த 2ம் தேதி வந்தார். தொடர்ந்து ரஞ்சித் கண்ணன், அத்தை மகன் ஹரிசந்தோசுடன் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பார்க்க கீதாபுரம் படித்துறைக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றார். அப்போது, அங்கு 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் மது அருந்தி கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் ரஞ்சித் கண்ணன் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், உருட்டு கட்டையால் ரஞ்சித் கண்ணனை சரமாரி தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை ஹரி சந்தோஷ் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி ரஞ்சித் கண்ணன் இறந்தார். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அம்மா மண்டபம் சாலையை சேர்ந்த நவீன்குமார்(23), அதே பகுதியை சேர்ந்த விஜய்(23), சரித்திர பதிவேடு குற்றவாளி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுலிக்கி சுரேஷ்(25) மற்றும் 2 சிறுவர்களை நேற்று கைது செய்தனர். சுலிக்கி சுரேஷ் சில தினங்களுக்கு முன்புதான் திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.