திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குட்லவல்லேரு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக கல்லூரியில் விடுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளியலறைக்கு சென்ற மாணவி ஒருவர், அங்கு ரகசிய கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சக மாணவிகளிடம் தெரிவித்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் இப்பிரச்னையை வெளியே தெரியாதவாறு கல்லூரி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நேற்றுமுன்தினம் மாலை கல்லூரி வெளியே போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்ததாக சந்தேகிக்கப்படும் பிடெக் மாணவர் விஜயகுமாரின் அறைக்கு சென்று அவரை சரமாரி தாக்கினர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு தெரிவித்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விஜயகுமாரை மீட்டு விசாரித்தனர். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்புகளை சோதனை செய்தனர்.அதில் சுமார் 300 மாணவிகளின் குளியல் காட்சிகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணவன் விஜயகுமார் மாணவிகளின் குளியலறைக்குள் பல மாதங்களுக்கு முன்பே ரகசிய கேமராவை வைத்து வீடியோ எடுத்துள்ளார். சுமார் 300 வீடியோக்களில் முதற்கட்டமாக 22 மாணவிகளின் குளியல் காட்சிகளை சட்டத்துக்கு புறம்பான ஒரு இணையதளத்தில் விற்று பணம் சம்பாதித்துள்ளார்.
* குளியலறையில் கேமரா பொருத்தியது எப்படி?
போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் விஜயகுமார் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். காதலியுடன் தனியாக இருந்ததை விஜயகுமார் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியதால், அந்த மாணவியை மாணவிகள் விடுதியில் குளியலறையில் கேமரா பொருத்தியது தெரியவந்துள்ளது.