சென்னை: கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2023ம் முதல் வழங்கப்படுகிறது. நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு: 2025ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணை வேந்தர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
இதுதவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியாளர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதை டெல்லியில் செப். 5ம் தேதி ஜனாதிபதி அளித்து கவுரவிப்பார். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 01129 581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.ugc.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.