பெரம்பூர்: தனக்காக தாய் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்த கல்லூரி மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ஓட்டேரி குட்பட் பள்ளம் 1வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் ரேகா (19) அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுரேஷ் கடந்த 2010ம் ஆண்டு இறந்துவிட்டார். தனலட்சுமி, பூந்தமல்லி பகுதியில் உள்ள தோல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த வாரம் தனலட்சுமிக்கு 2வது முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தனக்காகத்தான் தனது அம்மா வேலைக்குச் சென்று கஷ்டப்படுகிறார் என்று ரேகா விரக்தியில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் பினாயிலை எடுத்து ரேகா குடித்து விட்டார். அளவுக்கு அதிகமாக பினாயிலை குடித்ததால் தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரேகா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.