திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வீட்டுக்கு தாமதமாக வந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது நண்பர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவரது மகன் ஆண்ட்ரூஸ் (20) தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சில நாட்களாக வீட்டிற்கு இரவில் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஆண்ட்ரூஸ் வீட்டில் இருந்தபடி தனது நண்பர்களை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘எனக்கு வாழவே பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்,’’ என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். அவரது நண்பர்கள், ஆண்ட்ரூஸ் வீட்டின் அருகே இருக்கும் மற்ற நண்பர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து பார்ப்பதற்குள், வீட்டின் மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், ஆண்ட்ரூசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.