வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சமீப காலமாக மாணவிகளுக்கு கல்லூரிக்குள் சிலர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 30ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளை மட்டும் கையை உயர்த்த சொன்னார்கள். அப்போது சில மாணவிகள் கைகளை உயர்த்தினர். இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறிய 6 மாணவிகளிடம் பதிவு செய்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தனிப்படையினர் விசாரணை நடத்தியதில், வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியர் சதீஷ்குமார் (39), வால்பாறை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த லேப் அசிஸ்டெண்ட் அன்பரசு (30), வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த என்சிசி அலுவலர் முரளிராஜ் (33), ஊட்டி பகுதியை சேர்ந்த நான் முதல்வன் திட்ட அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலியல் சீண்டல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் நேற்று கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் ஒருவரின் மனைவியும் அதே கல்லூரியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தற்போது 6 மாணவிகள் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில், மேலும் சிலர் புகார் அளிக்கக்கூடும் என கூறப்படுகிறது.