வேளச்சேரி: எண்ணூர், காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் தீபக் (18), வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தனது நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ், சைதாப்பேட்டை பிரவீன், கவுரிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி ஆகியோருடன் பள்ளிக்கரணை அணை ஏரிக்கு வந்தார்.பின்னர் 4 பேரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, தீபக் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.
திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சக நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால், தீபக் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீஸ் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீபக் குளித்த பகுதிக்கு சென்று தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வந்து தீபக்கின் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.