கல்லூரி விரிவாளராக பணியாற்றியிருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் தான் எனது முதல் விருப்பம் என்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ப்ரீ ஸ்கூல் நடத்தி அசத்தி வருகிறார் பிஎச்டி படித்துள்ள துர்கா தேவி. பிஎட் மற்றும் பிஎச்டி முடித்துள்ள துர்கா தேவி சைக்காலஜி படிப்பினையும் படித்துள்ளார். கல்விப்பணிகளோடு குழந்தைகளுக்கான மற்றும் பெற்றோர்களுக்கான கவுன்சில் அளிப்பதும் இவரது பணிகளுள் ஒன்று. இது மட்டுமின்றி தான் பெற்ற கல்வியினை பிறருக்கும் பயன்படும் வகையில் முறையான மாண்டெசோரி டிரெயினிங் அளித்து வெவ்வேறு ஊர்களில் ப்ரி ஸ்கூல் அமைத்தும் தருகிறார். சிறு குழந்தைகளுடன் கல்விப்பணியோடு பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார் துர்கா தேவி. தனியொரு பெண்ணாக கல்வித் துறையில் திறம்பட சாதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் துர்கா தேவி தனக்குப் பிடித்தமான கல்வித்துறை குறித்து விளக்குகிறார்.
கல்வித் துறையில் உங்கள் அனுபவங்கள் குறித்து…
நான் முதலில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியில் இருந்தேன். எனக்கு சொந்தத் தொழில் செய்ய வேண்டும், பெரிய அளவில் சாதிக்க வேண்டும் அதே நேரம் குழந்தைகளுடன் நேரமும் செலவழிக்க வேண்டும் என்கிற ஆசையில் வேலையை விட்டுவிட்டு தைரியமாக ப்ரீ ஸ்கூல் தொடங்கினேன். ஆரம்பத்தில் எங்கள் வீட்டிலேயே பலருக்கும் அதில் விருப்பம் இல்லை தான். எனது இரண்டாவது குழந்தையை ப்ரீ ஸ்கூலில் சேர்க்க நினைத்தபோது அதற்குத் தகுந்த ப்ரீ ஸ்கூல் கிடைக்கவில்லை. அப்போது நாமே ஒரு ப்ரீ ஸ்கூலை தொடங்கி நடத்தினால் என்ன என்கிற யோசனையும் தோன்றியது. அதன் காரணமாக 2021 ல் சொந்தமாகக் குழந்தைகளுக்கான ப்ரீ ஸ்கூல் ஒன்றினை ஆரம்பித்து , அதனை கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தியும் வருகிறேன்.
இதர பணிகள் குறித்து..
எனக்கு நிறைய பிள்ளைக்கு டியூஷன் எடுத்த அனுபவங்களும் ப்ரீ ஸ்கூலை திறம்பட நடத்த காரணமாக இருந்தது. நான் சைக்காலஜி குறித்த படிப்பையும் முடித்துள்ளதால், பலருக்கும் கவுன்சலிங் கொடுத்துவருகிறேன். குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு மற்றும் பல்வேறு பிரச்னைகளுடன் வருவோருக்கு கவுன்சலிங் தந்து வருகிறேன். பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விருந்தினராகச் சென்று மோட்டிவேஷ்னல் ஸ்பீச் தருகிறேன். என்னைப் போலத் தொழில்முனைவோராக மாற நினைக்கும் பெண்களுக்கு முறையான பயிற்சிகள் அமைத்து ப்ரீ ஸ்கூல் நடத்தத் தகுந்த வழிமுறைகளையும் சொல்லி தருகிறேன்.
ஆட்டிசம் குழந்தைக்கு கற்பிப்பது குறித்துச் சொல்லுங்கள்?
இதுவரை சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போன்று சரிவர பேசமுடியாத குழந்தைகளும் எங்களிடம் வருவதுண்டு. அனைவருக்கும் சிறப்பான பயிற்சிகளை பழக்குவதன் மூலம் கல்வியை அவர்களிடம் சேர்ப்பிக்கிறோம். எனது குழந்தை ஆரம்பத்தில் கொஞ்சமாக தான் பேசுவாள் எங்கள் ப்ரீ ஸ்கூலில் சேர்ந்த போது மிக சரளமாக பேச ஆரம்பித்தாள். அதை பார்த்து பல சரிவர பேச இயலாத சில குழந்தைகளும் எங்களின் பள்ளிக்கு வந்தனர். அதில் சில குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை உணர முடிந்தது. அந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனமெடுத்து கற்பிக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தை பார்த்த சில ஆட்டிசம் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் சேர ஆரம்பித்தனர். எனது சைக்காலஜி படிப்பு இதற்கு பெரிதும் உதவியது எனலாம். இவர்களுக்கு இன்னமும் நிறைய கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்கள் உள்ளது. அதற்கான பல்வேறு கற்றல் வழிமுறைகளையும் பரிசோதித்து வருகிறேன்.
சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது எதை மனதில் கொள்ள வேண்டும்?
மிக பெரிய வசதியுடைய பள்ளியா என யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நமது வீட்டிற்கு அருகிலோ சுலபமாக சென்று வரக்கூடிய இடத்தில் பள்ளி அமைந்திருக்கிறதா என யோசியுங்கள். பெரும் வசதிகளை விட கற்றுக்கொடுக்கும் பள்ளியும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என கவனியுங்கள். பள்ளி சூழல் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகவும் பிடித்தமான தாகவும் இருக்கிறதா என பார்த்துக் கொண்டாலே போதும். மாணவ செல்வங்களுக்கு ஆரம்ப கல்வி என்பது மிக முக்கியமாக வாழ்வின் அடித்தளத்தை ஆழமாக அமைக்கக்கூடிய ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கல்வியாளராக கிராமப்புற மாணவ செல்வங்களின் கல்வி இடை நிற்றல் குறித்து விளக்குங்கள்?
கிராமப்புற மாணவர்களுக்கு சில பிரச்னைகள் எனில் நகர்புற மாணவர்களுக்கு வேறு பல சிக்கல்கள். பொதுவாகவே கிராமப்புற மாணவர்களின் தலையாய பிரச்னை என்பது கல்வியில் இடைநிற்றல். எப்போதும் அது வறுமையின் காரணமாகவோ பொருளாதார பிரச்னைகளாலோ கல்வி இடை நிற்றல் நடைப்பெறும். தற்போதைய காலசூழலில் அரசுபள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை தான். இவர்களில் பலர் பள்ளி விடுமுறை நாட் களில் சிறுசிறு வேலைகளுக்கு சென்று பணம் ஈட்ட தொடங்கி விடுவார்கள். இதனால் கையில் பணம் புழங்க தொடங்கியதால் திரும்பவும் இவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் கட்டாயம் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
இதில் மாணவ பருவத்தில் புழங்கும் பணவசதிகளால் போதைப் பழக்கவழக்கங்கள் மற்றும் விலை உயர்ந்த எலக்ரானிக் பொருட்களின் உபயோகங்கள் என தடம் மாறி பயணிப்பதாக மாணவச் செல்வங்கள் மேல் பற்பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளது. கிராமப்புற ஆண்பிள்ளைகளின் பிரச்னைகள் இப்படியாக இருக்க கிராமப்புற பெண் மாணவிகளின் பிரச்னை வேறுமாதிரி திசைதிரும்புகிறது. குழந்தைத் திருமணம், படிப்பை பாதியில் நிறுத்தி இடையில் திருமணம் போன்ற பாதிப்புக்கள் வருவதாக செய்திகள் கவலையாக இருக்கும். ஆனால் கல்வி அனைவருக்கும் வாழ்க்கையை திறக்கும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். கல்வி அனைவருக்கும் பொதுவானது கூட. குறிப்பாக பெண்கல்வி சுய முன்னேற்றம் சுய பொருளாதாரம் என்பது ஒன்றை ஒன்று சார்ந்தது தானே. எனவே பெண்கல்விக்கு போதுமான முக்கியத்துவங்கள் தரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள் எனலாம் கல்வியாளர் துர்கா தேவி.
இவரது கல்வி பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் துர்கா. நிறைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியின் அவசியம் குறித்து மேடை களில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரது பெரும் ஆசையாக கடந்த வருடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களை அவர்களது சீரிய பணிகளுக்காக விருது வழங்கி கௌரவித்தார். கல்வி சார்ந்த பணிகளோடு இலவச உணவு வழங்குவது என பல்வேறு சமூக பணிகளையும் முன்னெடுத்து செய்து வருகிறார் கல்வியாளரும் சமூக அக்கறை கொண்டவருமான ஆசிரியை துர்கா தேவி.
– தனுஜா ஜெயராமன்.