Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்ப பதிவு: மாணவர்களின் விருப்ப கல்லூரியாக மாறிய தமிழ்நாட்டின் 5 கல்லூரிகள்

* சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம், சென்னை மாநிலக்கல்லூரியின் சேர்க்கை இரட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்த வருடம் கூடுதலாக 11 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, 180 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாநில கல்லூரி (2,380 இடங்கள்), ராணி மேரி கல்லூரி (2,038), பாரதி மகளிர் கல்லூரி (1,410), டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (1,086), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (1,468), நந்தனம் அரசு கலைக் கல்லூரி (1,430), ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரி (590), ஆலந்தூர் அரசு கலைக் கல்லூரி (280) என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். மே 27ம் தேதியுடன்விண்ணப்ப பதிவு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29ம் தேதியும் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30ம் தேதியும் அரசு கல்லூரிகளில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று மற்றும் நாளை (ஜூன் 2, 3), பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30ம் தேதி ஆரம்பமாகும்.

இந்த ஆண்டு தமிழகத்தின் மாணவ-மாணவிகளில் விருப்ப கல்லூரிகளில் முதல் 5 இடத்தை பிடித்த அரசுக் கல்லூரியாக சென்னை பிரசிடென்சி கல்லூரி, கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மற்றும் திருச்சி பெரியார் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 5 கல்லூரிகளுக்கும் அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 40,167 விண்ணப்பங்களும், நந்தனம் கல்லூரி 29,376 விண்ணப்பங்களும், அம்பேத்கர் கல்லூரி 29,275 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிஏ தமிழ், பிகாம், பிஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி வேதியியல் மற்றும் பிஏ பொருளாதாரம் ஆகியவை உள்ளன.

கல்லூரி கல்வி இயக்குநரகம் வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டு 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,465 இடங்கள் உள்ளன. இதுவரை, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கை போர்டல் மூலம் முதல்கட்ட விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 27 ஆயிரத்து 712 விண்ணப்ப பதிவுகளும், அதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 310 பேர் கட்டணத்தொகையும் செலுத்தியுள்ளனர்.

பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அடிப்படை அறிவியலுக்கு குறைவான விண்ணப்பங்களைப் பெற்றாலும், பிரசிடென்சி கல்லூரி இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியலுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இதுகுறித்து சென்னை பிரசிடென்சி கல்லூரி முதல்வர் ராமன் கூறியதாவது: இந்த ஆண்டு மொத்தம் 40 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் பெண்கள் 18,687, ஆண்கள் 21,461, திருநங்கைகள் 19 பேர் உள்ளனர்.

பிஎஸ்சி வேதியியலுக்கு மட்டும் 20,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளது. பொருளாதாரம், வரலாற்று ஆய்வுகள் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட பிஏ படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்தன. இதுவரை மாநிலக் கல்லூரியில் 3 படிப்புகளுக்கு மட்டுமே 2வது ஷிப்ட் இருந்தது. தற்போது 13 துறைகளுக்கு சேர்த்து மொத்தம் 16 துறைகளுக்கு 2வது ஷிப்ட்டை தொடங்கி உள்ளோம்.

இதனால் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது. இதனால் மாநிலக் கல்லூரிக்குள் இன்னொரு மாநிலக் கல்லூரி வந்துள்ளது.

மேலும் இந்த வருடம் முதன்முறையாக பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 அல்லது 3 அண்டை மாநிலங்களில் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரும். ஆனால் இந்த வருடம் 18 மாநிலங்களில் இருந்து 133 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நந்தனம் அரசு கலைக் கல்லூரியில், பெறப்பட்ட 29,376 விண்ணப்பங்களில் 12,211 பேர் பெண்கள். “கடந்த ஆண்டுதான் இந்த கல்லூரி இருபாலருக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அனைத்து இளங்கலைப் படிப்புகளிலும் பெண்களுக்கான சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு அனைத்துப் படிப்புகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவோம் என நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையின் மற்றொரு பிரபலமான அரசு கல்லூரியான குயின் மேரி கல்லூரியிலும் 2,038 இடங்களுக்கு 23,018 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்ப பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் கூடுதல் விண்ணப்பங்கள் அதிகரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.