*கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தில் நின்று கல்லூரி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்து வருகின்றனர். போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்கள், ஓடும் ரயில்கள், தண்டவாளங்களில் ரீல்ஸ் வீடியோ, ரயில்கள் வரும்போதும், தண்டவாளங்களில் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ஜங்ஷன் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கிராமப்புற பகுதிகளில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு – சேலம் ரயில் வழித்தடத்தில் பள்ளிபாளையம் அமைந்துள்ளது. இதில் கீழ்காலனி பயணியர் மாளிகை, காவிரி பாலம் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ், செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று 5க்கும் மேற்பட்டோர் கல்லூரி மாணவர்கள் பயணியர் மாளிகை பகுதியில் தண்டவாளத்தில் நின்று வீடியோக எடுத்தனர்.
அதில் ஒரு மாணவர் தண்டவாளத்தில் அமர்ந்து போனில் மெய்மறந்து பேசிக்கொண்டு இருந்தார். இந்த ரீல்ஸ் வீடியோவை ஒருவர் வளைதளத்தில் வைரலாக்கியுள்ளார்.
அடிக்கடி இந்த தண்டவாளம் பகுதியில் ரயில் மோதி பலர் உயிரிழந்து வருகின்றனர். மாலை வேளைகளில் ரயில்வே போலீசார், இந்த பகுதியை கண்காணித்து அத்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.