*தென்னை ஓலையை வீசி 2 பேரை மீட்ட உறவினர்
அருமனை : அருமனை அருகே சட்டவிரோதமாக மண் எடுத்த குளத்தில் டைவ் அடித்த கல்லூரி மாணவர் சகதியில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சகதியில் சிக்கிய தம்பி உள்பட 2 பேரை உறவினர் ஒருவர் தென்னை ஓலையை வீசி காப்பாற்றினார்.குமரி மாவட்டம் அருமனை அருகே மாலைக்கோடு காமக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரைட். இவரது மகன் பிரினித் (19).2வது மகன் பிரதீப். பிரினித் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே சிறிய குளம் ஒன்று உள்ளது. குளத்தில் பிரினித், பிரதீப் ஆகியோர் அடிக்கடி குளிப்பது வழக்கம். சமீபத்தில் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது.
அப்போது சட்டவிரோதமாக அதிகளவில் மண் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கனமழை பெய்து வருவதால் குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்ததால் குளத்தின் கரையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணையும் அரித்துக்கொண்டு குளத்திற்குள் தள்ளியது. இதனால் குளத்தில் சகதி நிரம்பி புதைக்குழிபோல் காட்சியளிக்கிறது.
இதனை யாரும் அறியவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரினித் வழக்கம்போல தனது தம்பி பிரதீப் மற்றும் உறவினர் மகன் ரனாய் ஆகியோரை அழைத்துக்கொண்டு குளக்கரைக்கு சென்றான். பின்னர் 3 பேரும் குளத்திற்குள் இறங்கி குளித்து உள்ளனர். இந்த நேரத்தில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக குளத்தின் ஆழமான பகுதியில் டைவ் அடித்தனர். ஆனால் அந்த பகுதியில் சகதி அதிகளவில் இருந்ததால் பிரினித், பிரதீப், ரனாய் ஆகிய 3 பேரும் சகதியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
வெளியே வர முயற்சி செய்தாலும் சகதியில் சிக்கியதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. 3 பேரும் உயிர் பயத்தில் காப்பாற்றுங்கள்…. என்று கூச்சலிட்டனர். இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் வசிக்கும் உறவினர் ரத்தினதாஸ் ஓடிவந்தார். குளத்தின் உள்ளே பிரினித் உள்பட 3 பேரின் தலை மட்டுமே வெளியே தெரிந்தது.
உடனே கீழே விழுந்து கிடந்த தென்னை ஓலையை எடுத்து குளத்துக்குள் வீசினார். பிரதீப் மற்றும் ரனாய் ஆகியோர் தென்னை ஓலையை இறுக பற்றிக்கொண்டனர். அவர்கள் 2 பேரையும் ரத்தினதாஸ் இழுத்து பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தார். அதற்குள் பிரினித் குளத்துக்குள் மூழ்கிவிட்டார் இது பற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் குளக்கரைக்கு வந்த பொதுமக்களில் சிலர் கயிறுகட்டி குளத்துக்குள் இறங்கினர்.
குளத்திற்குள் சகதியில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த பிரினித்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக காரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் உள்ள மருத்துவமனைக்கு பிரினித்தை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்தபோது பிரினித் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். மீட்கப்பட்ட பிரதீப், ரனாய் ஆகிய 2 பேரும் தற்போது பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்ல உள்ளனர். இது குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.