சென்னை: தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவரது பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து படித்தனர். அதில், கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டு இருந்தது. இதனால் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
உடனே கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமியை கண்டு பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தனது பெயரில் யாரோ கடிதம் எழுதி இருப்பதாகவும், தனக்கும், அந்த கடிதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சேலம், திருச்சி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கும் இது போன்ற கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் சேலம் மற்றும் திருச்சி கலெக்டர்அலுலகங்களில் நேற்று வெடிகுண்டு செயல் இழப்பு போலீசார் சோதனை நடத்தினர்.