புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுடன் தேநீர் அருந்தி உரையாடினர். ஆட்சியருடன் உரையாடியது கனவுகளை அடையமுடியும் என்ற நம்பிக்கையை அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை கிராம புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அவர்களின் தேவை என்ன என்பதை அறியும் வகையில் ஆகஸ்ட் முதல் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சியை ஆட்சியர் மெர்சி ரம்யா நடத்தி வருகிறார்.
அதற்கான நவம்பர் மாதத்திற்கான நிகழ்ச்சியில் ஆவுடையார் கோவில் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி மற்றும் மணல்மேல்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் ஆட்சியர் மெர்சி ரம்யாவுடன் தேநீர் அருந்தி உரையாடினர். மாணவிகளின் எதிர்கால கனவு குறித்து கலந்துரையாடிய போது மாணவிகள் அனைவரும் தங்கள் விருப்பங்களை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியராகவும், மருத்துவராகவும், வழக்கறிஞர் ஆகவும் வர மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அப்போது மணல்மேல்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி பாத்திமா கனி பிரதமராக வேண்டும் என்று கூறி அசத்தினார்.
மாணவிகள் தங்கள் கனவை எட்டுவதற்கு என்ன படிக்க வேண்டும் என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும் என்பன குறித்து எடுத்துரைத்து முயற்சியை தொடர ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இதே போல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வேறு அதிகாரிகளும் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்து மகிழ்ந்தனர். ஆட்சியருடன் அமர்ந்து தேநீர் அருந்தி உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்த மாணவிகள் எதிர்காலத்தில் கனவுகளை நிறைவேற்றி கொள்வதற்கு நம்பிக்கை அளித்துள்ளதாக கூறினர்.