திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் மருத்துவருக்கான அங்கிகள், பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.ரேவதி வரவேற்றார். துணை முதல்வர் திலகவதி, நிலைய மருத்துவர் கே.என்.ராஜ்குமார், முதுநிலை குடிமை விஜயராஜ், பொது மருத்துவ பிரிவு இயக்குநர் (ஓய்வு) சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்து மருத்துவருக்கான அங்கிகள், பாடபுத்தகங்களை வழங்கி வாழ்த்தி பேசியதாவது:
இந்த மருத்துவமனையானது 21.48 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக ரூ.196 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்தாண்டு பிரதமர் மோடியால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 10 அறுவை சிகிச்சை அரங்குகளும், 870 படுக்கை வசதிகளும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. 5 விரிவுரை அரங்குகளும் ஒவ்வொரு மருத்துவ துறைக்கும் தனித்தனியாக ஆய்வு கூடங்களும் ஆராய்ச்சி கூடங்களும் உள்ளது.
இம்மருத்துவ கல்லூரியில் 2021-22ம் ஆண்டில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்குள்ள பிரமாண்டமான மத்திய நூலகத்தில் 4500 புத்தகங்களும் 40 மருத்துவ இதழ்களும் மற்றும் இணைய வழி நூலகமும் உள்ளது. 750 நபர்கள் அமரக்கூடிய அளவில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய உள் அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருபாலினத்தவருக்கும் தனித்தனியாக விடுதிகளும் உணவகங்களும் உடற்பயிற்சி கூடங்களும் உள்ளது. இங்கு கல்வி கற்க வந்துள்ள முதலாம் ஆண்டு மருத்துவர்கள் அனைத்து வசதிகளையும் முழுமையாக பயன்படுத்தி, நல்ல முறையில் கற்றறிந்து சிறந்த மருத்துவர்களாக திகழவும் மருத்துவ சேவை புரியவும் வாழ்த்துகிறேன் .இவ்வாறு அவர் பேசினார்.