பந்தலூர் : நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா- 1 வருவாய் கிராமம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசும்போது.‘‘தமிழக முதல்வர் ஊட்டிக்கு வந்தபோது கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட கூடுதல் மருத்துவர்களை நியமித்துள்ளார் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்டுகிறது.
மேலும் மாவட்டத்தில் ஆயிரம் பேருக்கு மனை பட்டா கொடுக்க உத்தரவு பிரபித்துள்ளார் அதில் 600 பயனாளிகள் கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயணாளிகள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளனர். 300 வீடுகளை கொண்ட கலைஞர் நகர் கூடலூர் பகுதியில் அமைய உள்ளது. மேலும் பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூபாய் 5.73 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
கல்வி கடன், மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி, ஈமச்சடங்கு உதவித்தொகை, குடும்ப அட்டை, இலவச தையல் இயந்திரம், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட 157 பயனாளிகளுக்கு 4.47 கோடிகளுக்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் சங்கீதா வரவேற்று பேசினார். கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் துறைவாரியான திட்டங்களையும் அதனை எவ்வாறு பெறுவது என விளக்கம் அளித்தனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த ஸ்டால்களை கலெக்டர் பார்வையிட்டார். மக்கள் தொடர்பு முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்டு துறைவாரியான அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முடிவில் கூடலூர் தாசில்தார் முத்துமாரி நன்றி கூறினார்.