ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தல் திறன் சிறப்பாக இருந்த அரசு பள்ளிகளுக்கு பாிசு தொகை மற்றும் கல்வி வளர்ச்சி நாள் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர் சேர்க்கை, மாணவர்கள் இடைநிற்றல் இல்லாதது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக அமைந்திருத்தல், அதிகமான அளவில் புரவலர்கள் பங்களிப்பு கலை, இலக்கியம் மற்றும் நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்து விளங்குதல், பொதுமக்கள் மற்றும் தனியாரிடமிருந்து பள்ளியில் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களது பங்களிப்பினை பெற்று பள்ளிக்கு தேவைப்படும் தளவாட சாமான்கள் மற்றும் மாணவர்களுக்கு பலனளிக்கும் பல திட்டங்களை பெற்ற பள்ளிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.
மேலும், பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குள், அனைத்து பாடங்களிலும் சராசரி கற்றல் அடைவு திறன் 60 சதவீதத்திற்கும் மேல் இருத்தல் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னை ஆசிரியர் கழகம், கல்விக்குழு ஆகியவை முறையாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட கோத்தகிரி கேர்கம்பை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை, கூடலூர் பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையும், கூடலூர் தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.2.50 லட்சம் காசோலைகள் மற்றும் காமராஜர் பரிசுகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) நந்தகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.