தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மக்கள் குறைதீர் கூட்டத்தில், அதிகாரிகளிடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆதனூர், தெத்தம்பட்டி, அரங்காபுரம், பளிஞ்சரஅள்ளி, நலப்புரம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, நல்லாம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆதனூரில் டாஸ்மாக் செயல்பட்டு வந்தது.
நெடுஞ்சாலையில் செயல்பட்டதால் அகற்றப்பட்டது. இதனால் எங்கள் ஊரில் வசிப்பவர்கள், மது வாங்க தர்மபுரிக்கு 24 கி.மீ. தூரத்திற்கும், ஜக்கம்பட்டிக்கு 20 கி.மீ. தூரத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தொலைதூரம் சென்று மது அருந்தி விட்டு வரும் போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே, எங்கள் ஊரிலேயே டாஸ்மாக் கடை இருந்தால் இது தடுக்கப்படும். எனவே, அஞ்சேஅள்ளி ஊராட்சி பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.