*ராணிப்பேட்டை கலெக்டரிடம் மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சொந்த வீடு இல்லாமல் சிரமப்படும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் திருநங்கைகள் மனு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, துணை ஆட்சியர் (கலால்) ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.
அதன்படி, ராணிப்பேட்டையைச் சேர்ந்த திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த வீடு இல்லாமல் சிரமப்படுகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சோளிங்கரை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் அளித்த மனுவில், தனது மகள் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும், அவருக்கு இந்திரகாந்தி திட்டத்தின் மூலமாக நிவாரண உதவித்தொகை வேண்டுமென தெரிவித்திருந்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் வளர்மதி உடனடியாக அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், யோகலட்சுமியின் மகள் தமிழ்செல்வி டிப்ளமோ நர்சிங் சேர்ந்துள்ளதாகவும், அங்கு சக மாணவிகள் தன் குறைபாட்டை கிண்டல் செய்வதாக கூறினார். இதைக்கேட்ட கலெக்டர் வளர்மதி, தன்னம்பிக்கையுடன் உன் வாழ்க்கையை மாற்ற நீ போராட வேண்டும். லட்சியத்துடன் நீ படிக்க வேண்டும். கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் விருப்ப கொடை நிதியில் இருந்து 13 நபர்களுக்கு ₹64 ஆயிரத்து 762 மதிப்பிலான நிதியுதவிகள், 2019ம்-ஆண்டு அதிகப்படியாக படைவீரர் கொடிநாள் நிதி வசூலித்த பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் பாலாஜி, 2020-ம் ஆண்டு கொடி நாள் நிதி அதிகப்படியாக வசூலித்த அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஆனந்தன் ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கம், தமிழ்நாடு அரசு தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களையும், காரை கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் 10 மாணவர்களுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு துறைசார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.