*விசாரணைக்கு டிஆர்ஓ உத்தரவு
திருப்பத்தூர் : சுகாதார பெண் அலுவலருக்கு அதிகாரி பாலியல் தொல்லை கொடுப்பதாக கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இடைநிலையாசிரியர்கள் தங்களது கண்களில் சிவப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் நியமன தேர்வில் தமிழகம் முழுவதும் 25,606 தேர்வர்கள் எழுதினோம்.
ஆனால் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் 2768 காலி பணியிடங்கள் உள்ளது என அறிவித்திருந்தது. மேலும் 2013 முதல் தற்போது வரை ஒரு காலிப்பணியிடங்கள் கூட நிரப்பாமல் நான்கு முறை டிஆர்பி தேர்வு மட்டும் நடத்தியுள்ளது.
ஆனால் தற்போது நாங்கள் 40 வயது முதல் 50 வயதை கடந்துள்ளோம். எனவே அரசு அறிவித்துள்ள 2768 காலி பணியிடங்கள் மிகவும் குறைவானது. எனவே அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்கும் முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
323 மனுக்கள் மீது விசாரணை
நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 323 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிஆர்ஓ நாராயணன் உத்தரவிட்டார்.