திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மனுக்கள் எழுதிக் கொடுக்கும் நபர்களிடம் கலெக்டர் சரவணன், குறைகளை கேட்டறிந்தார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அன்று மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். அவர்களுக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து 10க்கும் மேற்பட்டவர்கள் மனு எழுதிக் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மனுக்கள் எழுதும் நபர்களிடம் கலெக்டர் சரவணன், பொதுமக்களுக்காக எழுதிக் கொடுக்கும் மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.இது குறித்து கலெக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மனுக்கள் எழுதும் நபர்களை தினந்தோறும் பார்த்து வருகிறேன். அவர்களின் குறைகளை கேட்பதற்காக அவர்களை நேரில் சந்தித்தேன். மனுக்களுக்கு குறைந்த தொகை வாங்குவதாக கூறுகின்றனர். மேலும் தங்களது குழந்தைகள் பட்டதாரிகளாக உள்ளனர்.
அவர்களுக்கு அரசு ஏதாவது நிதி தர வேண்டும், வேலை வாய்ப்பு தர வேண்டும். எங்களுக்கும் முதியோர் உதவித்தொகை தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அரசின் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைகிறதா, என்பதற்காக அவர்களை சந்தித்தேன்.
மேலும் மனுக்கள் எழுதும் நபர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களின் குறைகளை கேட்டு இலவசமாக மனுக்கள் எழுதுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
382 மனுக்கள் பெறப்பட்டன
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடர்பான 382 மனுக்களைப் பெற்றார்.
மேலும் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு செயற்கை கால், வாட்ச், கண்காண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டை குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.