திருவாரூர், ஜூலை 29: ஒன்றிய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான மாணவர்கள் எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் (ஓபிசி, இபிசி மற்றும் டிஎன்டீ) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தினைச் சார்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவிகள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்