பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர், நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக ஷீலா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இவர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் கையூட்டு பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கிய நிலையில், ஷீலா நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதால் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவரும் மருத்துவமனைக்குள் வீல் சேர் தள்ளுவதற்கு, ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு, ஆபரேஷன் தியேட்டர் அழைத்துச் செல்வதற்கு, காயம் பட்டவர்களுக்கு கட்டுப்போடுவதற்கு என ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியாக பண வசூல் செய்வதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பலமுறை உள்ளூர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மருத்துவமனை அலுவலர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை கருவிகள் மற்றும் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டபொழுதும், அங்கு தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற விமர்சனமும் உள்ளது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் ஷீலா, லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா, நியூட்டனிடம் கேட்ட பொழுது, மாவட்ட மருத்துவத்துறை தலைமை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவர் சார்பாக உடனடியாக மெமோ வழங்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளார்.