ஸ்ரீபெரும்புதூர்: நெமிலி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வீஏஓ அலுவலக கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், நெமிலி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி நிர்வாக பணிக்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் ஊராட்சி செயலர், உதவியாளர், தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் மாதாந்திர கூட்டம் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் மேற்கூரையில் மழைநீர் கசிந்து கட்டிடம் முழுவதும் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதேபோல், இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையொட்டி சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த கட்டிடம் கடந்த சில வருடங்களாக பராமரிப்பு இன்றி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கடந்த சில வருடங்களாகவே நெமிலி ஊராட்சியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நெமிலி ஊராட்சிக்கு வராமல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் கட்டிடத்தை வாடகை எடுத்து அங்கு கிராம நிர்வாக அலுவலர், தனது அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறார்.
இதனால் நெமிலி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட வருவாய் துறை சம்பந்தப்பட்ட சான்றுகள் பெற சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நெமிலி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.