சிவகங்கை: காதல் திருமணம் செய்த கணவரை சேர்த்து வைக்கக்கோரி, சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கோவை இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் குகன் (25). இவர், கோவையில் உள்ள கல்லூரியில் படித்தபோது, அதே கல்லூரியில் படித்த ஷாமிலி (25) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்த நிலையில் குகன் தற்போது சிங்கப்பூர் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சொந்த ஊர் திரும்பிய குகன், கோவைக்கு சென்று ஷாமிலியை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் மானாமதுரை திரும்பியவர் ஷாமிலியுடன் தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில், தனது காதல் கணவரை தேடி ஷாமிலி மானாமதுரை வந்தார். ஆனால், அவரால் குகனை தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இந்நிலையில், ஷாமிலி நேற்று சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது புகார் தொடர்பாக மானாமதுரை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறினார். இளம்பெண்ணின் திடீர் போராட்டத்தால் எஸ்பி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், ஷாமிலியை சமாதானம் செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.