கோவை: கோவை திருச்சி சாலை ஒண்டிப்புதூர் பாலம் முதல் அல்வேனியா பள்ளி வரை மற்றும் காமராஜர் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில விபத்துகளுக்கும் இதனால் நடந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அகற்றவில்லை. இந்நிலையில், இன்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு சென்றனர்.
ஓட்டல், டீக்கடை, பேக்கரிகள் உள்ளிட்ட கடைகள் முன்பு இருந்த பந்தல்கள், ஷெட்டுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன. மாநகராட்சி உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கணேசன், இளநிலை பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.